Header Ads



துணை பைலட்டின் சதியை முறியடித்த இந்திய பைலட் - நடந்தது என்ன..?


விமானத்தைத் தரையில்மோதி நொறுக்க திட்டமிட்டிருந்த துணை பைலட்டின் சதியை இந்திய பைலட் துணிச்சலுடன் முறியடித்துள்ளார். துணை பைலட் கத்தியால் குத்திய போதும் ரத்தவெள்ளத்தில் இந்திய பைலட் 180 பயணிகளின் உயிரைக் காப்பாற்றி உள்ளார்.


ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவை நோக்கி நேற்று காலை 180 பயணிகளுடன், போயிங் 737 மேக்ஸ் 8 என்ற விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில மணி நேரத்தில் விமானிகள் உட்கார்ந்திருந்த ‘காக்பிட்’ அறையில் பைலட், துணை பைலட் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.


விமானம் பல்லாயிரக்கணக்கான அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, நடுவானில் இருவருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதனால், விமானம் செங்குத்தாக கீழ் நோக்கி கீழிறங்கியது. உடனடியாக விமான பணியாளர்கள் அவசர கால எச்சரிக்கைகளை இஸ்ரேல் நாட்டுக்குக் கொடுத்தனர். பொது அவசர நிலையை அறிவிக்கும் ‘7700’ என்ற எச்சரிக்கையும், விமானம் வழக்கத்துக்கு மாறாக சுமார் 15,000 அடி உயரத்தில் தாழ்வாகப் பறந்த போது, ‘ஸ்குவாக் 7500’ என்ற விமான கடத்தல் எச்சரிக்கையும் விடப்பட்டது.


விமானம் 30 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து சட்டென 10 ஆயிரம் அடிக்குக் கீழே இறங்கியது. திடீரென மீண்டும் அதிக உயரத்துக்குப் பறந்தது. இதனால், விமானத்தில் இருந்த பயணிகள் குழப்பம் அடைந்து பீதியில் அலறினர்.


இதற்கிடையில், தகவல் அறிந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாதுகாப்புத் துறை அமைச்சருடன் அவசர ஆலோசனை நடத்தினார். இஸ்ரேலிய வான்வெளி சிறிது நேரத்தில் மூடப்பட்டது. விமானம் கடத்தப்பட்டதாக முதலில் தகவல்கள் பரவின. இதனால் பயணிகள் விமானத்தைச் சுற்றிவளைக்க இஸ்ரேல் போர் விமானங்கள் களத்தில் இறக்கப்பட்டன.


அதற்குள் பயணிகள் விமானம், ஜோர்டன் வான்வெளிக்குள் நுழைந்து சிறிது நேரத்தில் சவுதி அரேபியா நோக்கி திரும்பியது. பின்னர் இந்த விமானம், சவுதி அரேபியாவில் உள்ள தபூக் விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது. அப்போது விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாயின. இதைத் தொடர்ந்து விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தைச் சூழ்ந்து கொண்டு பயணிகளைப் பத்திரமாகத் தரையிறக்கினர்.


இதுகுறித்து விமானத்தில் பயணம் செய்த மிரியம் என்ற பயணிகூறும்போது, “விமானிகளின் அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. விமானத்தின் கதவை ஊழியர்கள் திறந்த போது, விமானிகளில் ஒருவர் ரத்த காயங்களுடன் தரையில் கிடந்ததை நான் பார்த்தேன்" என்றார். துபாயில் இருந்து புறப்பட்ட விமானம் சவுதி - ஜோர்டான் வான் எல்லையில் பறந்த போது விமானத்தில் இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது.


விமானத்தின் பைலட்டுக்கும், துணை பைலட்டுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. விமானத்தின் பைலட்டைக் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்திவிட்டு விமானத்தின் துணை பைலட் விமானத்தைக் கடத்தி தரையில் மோத முயற்சித்தது தெரிய வந்தது.


ஆனால், விமானிகள் அறையில் அலறல் சத்தம் கேட்டவுடன், பயணிகள் சென்று உதவியுள்ளனர். துணை பைலட்டையும் மடக்கியுள்ளனர். அதன் பிறகு ரத்த வெள்ளத்திலும் துணிச்சலாகப் போராடி விமானத்தைத் தனதுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார் இந்திய விமானி ஸ்மித் மச்சார். பின்னர் சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினார்.


பல கட்ட சோதனைகள் இருந்தும் துணை பைலட் கத்தியை எப்படி விமானத்துக்குள் கொண்டு சென்றார் என்பது தெரியவில்லை. ஆனால், சிறிய பேனா கத்தியை அவர் மறைத்து கொண்டு வந்து, அதன் மூலம்தான் பைலட்டைக் குத்தியுள்ளார். இதுகுறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நடுவானில் இந்த சம்பவம் நடந்து வீடியோ வைரலானதால், சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.


துணை பைலட் கைது: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறும்போது, ‘‘விமானத்தை மோத செய்ய துணை பைலட் முயன்றுள்ளார். அப்போது விமானம் அதிவேகமாக கீழே இறங்கியுள்ளது. பயணி ஒருவரும், விமான ஊழியர் ஒருவரும் காக்பிட் அறைக்குச் சென்று கத்தியால் குத்திக் கொண்டிருந்த துணை பைலட்டை பிடித்து வெளியே இழுத்து வந்துள்ளனர். துணை பைலட் கைது செய்யப்பட்டுள்ளார்’’ என்றார்.


ஹீரோவான பைலட் இந்தியர்: துபாய்-டெல் அவிவ் விமானத்தைத் துணை பைலட் மோதச் செய்ய முயன்ற போது அவருடன் ஸ்மித் கடுமையாகப் போராடியுள்ளார். கத்திக்குத்து காயமடைந்த நிலையிலும் சமார்த்தியமாக விமானத்தைச் சவுதிக்குத் திருப்பி 180 பயணிகளின் உயிர்களைக் காப்பாற்றியுள்ளார். பைலட் ஸ்மித்தான் எங்கள் ஹீரோ என்று பயணிகள் அவரைப் புகழ்ந்தனர்.


ஸ்மித், அமீரக அரசு நடத்தும் ஃபிளை துபாய் விமான சேவை நிறுவனத்தில் கடந்த 4 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். வர்த்தக விமான சேவையில் 14 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர் ஸ்மித். ஸ்பைஸ் ஜெட் விமான நிலையத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் ஃபிளை துபாய் விமான நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றி வந்தார்.


Hindutamil

No comments

Powered by Blogger.