தாயை இழந்தபோதும் அகில இலங்கை ரீதியாக சாதனை படைத்த தனோஜ் தீக்ஷணவை பள்ளிசாசலுக்கு அழைத்து கௌரவித்த ஊர் மக்கள்
2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் குருநாகல் மாவட்டம், மஹவ கல்வி வலயத்தைச் சேர்ந்த எஹெட்டுவெவ ஆரம்பப் பாடசாலை மாணவன் தனோஜ் தீக்ஷண வீரசேகர 193 புள்ளிகளைப் பெற்று இலங்கை அளவில் முதலிடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்-அக்ஸா ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாக சபைத் தலைவர் S.L.M. அன்வர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கௌரவிப்பு நிகழ்வு, ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றது.
நிகழ்வை முன்னிட்டு அஸான் ஒலிப்பதற்கு முன்னர் வாகனப் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு, மாணவன் தனோஜ் தீக்ஷணவை கல்கமுவ அங்கமுகம பிரதேசத்தைச் சுற்றி அழைத்துச் சென்று அல்-அக்ஸா ஜும்ஆ மஸ்ஜிதிற்கு அழைத்து வரப்பட்டார்.
சிங்கள மொழியில் நடைபெற்ற ஜும்ஆ குத்பா
இந்நிகழ்வுடன் இணைந்ததாக, கல்கமுவ அங்கமுகம அல்-அக்ஸா ஜும்ஆ மஸ்ஜிதில் சிங்கள மொழியில் ஜும்ஆ குத்பா நடைபெற்றது.
தன்வீர் நிறுவனத்தின் பிரதிப் அதிபரும் மார்க்க அறிஞருமான ரஸ்மி அப்துர் ரஹ்மான் நளீமி அவர்கள் குத்பாவை நிகழ்த்தினார்.
அவரது குத்பாவில், “கல்வியைக் கற்றுக்கொள்பவராக இருங்கள்; கற்றுக்கொடுப்பவராக இருங்கள்; கற்றுக்கொடுப்பவருக்கு உதவி செய்பவராக இருங்கள்” என்ற நபி மொழியை அடிப்படையாகக் கொண்டு, கல்வியின் முக்கியத்துவம், அறிவைக் கற்றுக்கொள்வதன் அவசியம், பெற்ற அறிவை ஏனையோருடன் பகிர்ந்துகொள்வதன் பொறுப்பு மற்றும் கல்வி வளர்ச்சிக்கு சமூகத்தின் பங்களிப்பு ஆகிய விடயங்கள் எடுத்துரைக்கப்பட்டன.
அத்துடன், பல்வேறு இனங்களும் மதங்களும் இணைந்து வாழும் இலங்கை சமூகத்தில் இன நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் ரஸ்மி நளீமி அவர்கள் தனது குத்பாவில் வலியுறுத்தினார்.
தாயை இழந்த சிறுவனின் கல்விப் பயணம்
தனோஜ் தீக்ஷண சிறுவயதிலேயே தனது தாயை இழந்த நிலையில், தனது தந்தையின் அன்பு, அரவணைப்பு மற்றும் வழிகாட்டலின் கீழ் வளர்ந்துள்ளார்.
வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே எதிர்கொண்ட தாயின் இழப்பைத் தாண்டி, கல்வியில் தனது திறமையை வெளிப்படுத்தி இலங்கை அளவில் முதலிடம் பெற்றிருப்பது அவரது கல்விப் பயணத்தின் குறிப்பிடத்தக்க சாதனையாக அமைந்துள்ளது.
அவரது இந்த வெற்றி தனிப்பட்ட கல்விச் சாதனையாக மட்டுமன்றி, அவரது குடும்பத்திற்கும், எஹெட்டுவெவ ஆரம்பப் பாடசாலைக்கும், அவரை வழிநடத்திய ஆசிரியர்களுக்கும், கல்கமுவ அங்கமுகம பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ள ஒரு முக்கியமான சாதனையாக அமைந்துள்ளது.
ஒரு மாணவனின் கல்விச் சாதனையை சமூக மட்டத்தில் கௌரவித்ததுடன், கல்வியின் முக்கியத்துவம், அறிவைப் பகிர்ந்துகொள்வதன் பொறுப்பு மற்றும் இன நல்லிணக்கத்தின் அவசியம் ஆகியவற்றையும் ஒரே நிகழ்வில் வலியுறுத்தியமை இந்நிகழ்வின் குறிப்பிடத்தக்க அம்சமாக அமைந்தது.

Post a Comment