இஸ்லாமிய வெறுப்பு அரசியலின் உள்ளூர் வெளிப்பாடு
பெளத்த பேரினவாதத்தின் அடக்குமுறையால் நிலம், மொழி, அரசியல் பிரதிநிதித்துவம் என அனைத்திலும் ஒடுக்கப்பட்ட அனுபவத்தை கடந்து வந்த ஒரு சமூகமாக, தமிழ் சமூகத்திற்கு ஒடுக்குமுறை என்றால் என்ன என்பது நன்றாகத் தெரியும். அப்படியிருந்தும், தன்னைவிட சிறிய, தன்னுடனேயே இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் சிறுபான்மையினர் மீது இதே பேரினவாதிகளைப் போலவே "இவர்களது ஆடை அச்சுறுத்தல்",
"இவர்கள் மத தீவிரவாதிகள்" என்ற சந்தேகப் பார்வையை — தமிழ் சமூகமும் பல இடங்களில் பிரதிபலித்து வந்திருக்கிறது என்பதை நேர்மையாக ஒப்புக்கொள்ள வேண்டும்.
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட வரலாறு, கிழக்கில் நிலம் தொடர்பான பரஸ்பர சந்தேகங்கள் — இவை பழைய காயங்கள்தான், ஆனால் அவற்றை இன்றைய தலைமுறையின் மனதில் தொடர்ந்து நியாயப்படுத்துவது , ஒடுக்கப்பட்டவர் ஒடுக்குபவராக மாறும் ஒரு அபாயகரமான நிலையையே உருவாக்கும்.
தமிழ் தேசிய அரசியலின் எதிர்காலம் என்பது, தன்னை ஒடுக்கும் பேரினவாதத்தை மட்டும் விமர்சிப்பதாக இருக்கக் கூடாது; தன்னுள் வளர்ந்திருக்கும் மற்றொரு சிறுபான்மையினர் மீதான வெறுப்பையும் தீவிரமாக கேள்விக்குள்ளாக்கி, களைந்தெறியும் ஒரு சுய விமர்சனத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம், அது தமக்கு நேரும்போது மட்டும் "அநீதி" என்றும், அதே ஒடுக்குமுறையை இன்னொரு சிறுபான்மையினர் மீது தாமே செலுத்தும்போது அதை நியாயப்படுத்தியும் இரட்டை நிலைப்பாடு எடுக்க முடியாது.
பன்மைத்துவம் நிலைத்திருக்க வேண்டுமெனில், சிறுபான்மை சமூகங்கள் தமக்குள் ஏற்படுத்திக் கொள்ளும் நம்பிக்கையும் ஒற்றுமையும் அவசியம் என்பதை நாம் உணர வேண்டும்.
கல்முனை வைத்தியசாலைச் சம்பவம் ஒரு நிர்வாகத்தின் முடிவு மட்டுமல்ல; அது சட்டப்பூர்வமாக எந்த ஆதாரமும் இல்லாத, ஆனால் பரந்த இஸ்லாமிய வெறுப்பு அரசியலின் உள்ளூர் வெளிப்பாடு.
தமிழ் சமூகம் தன் வரலாற்று வலியை முன்னிலைப்படுத்தி பெரும்பான்மையை நியாயமாக விசாரணை செய்யும் அதே தார்மீகக் கண்ணோட்டத்தை, தன்னுள் வளர்ந்திருக்கும் முஸ்லிம் வெறுப்பையும் கேள்விக்குள்ளாக்க பயன்படுத்தாத வரை, அதன் தேசிய அரசியல் ஒரு பாசாங்குத்தனத்தையே சுமந்து செல்லும்.
ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தே இன்னொருவரை ஒடுக்குபவராக மாறும் இந்த முரணை உடைக்காத எந்த தேசியவாதமும், விடுதலைக்கானதல்ல — அது வெறும் இடம் மாற்றிய ஆதிக்கத்திற்கான போட்டி மட்டுமே. தமிழ் சமூகம் தன்னுள் வேரூன்றி இருக்கும் முஸ்லிம் வெறுப்பை வேரோடு பிடுங்கி எறியாத வரை, பெரும்பான்மை பேரினவாதத்திற்கு எதிராக அது எழுப்பும் ஒவ்வொரு நீதிக் குரலும் — அது எவ்வளவு உண்மையானதாக இருந்தாலும் — அறத்தின் அடிப்படையை இழந்த ஒரு வெற்றுக் குரலாகவே எஞ்சும்.
Mohana Dharshiny

Post a Comment