ஆயிரம் ஆயிரம் பிள்ளைகளை பெற்றேன். அவர்கள் மனதினில் இருக்கிறேன்...
அலைபேசி விடாது ஒலிக்க எடுத்துப் பார்க்கிறேன்
ஶ்ரீ ஹரி…
மூன்று வருடங்கள் 10,11,12 வது வகுப்பு கணிதம் என என்னிடம் தொடர்ச்சியாக படித்த பிள்ளை…
மகிழ்வுடன் அலைபேசியை எடுத்துப் பேச ஆரம்பிக்கிறேன்.
“டேய் கண்ணா , நல்லா இருக்கியா? எந்த காலேஜ்ல சேர்ந்திருக்க?”
“மேம் , சென்னை செல்கிறேன் மேம். அங்கு பொறியியல் படிக்கப் போகிறேன்”.
“வாழ்த்துகள்டா கண்ணா. “
“மேம் உங்கள பாக்கணும். அம்மாவும் நானும் இப்ப வரவா?”
“வெளில இருக்கேனேடா தங்கம். நாளை மாலை 6-9 மணிக்குள்ள வரமுடியுமா?” .
“ஓக்கே மேம்.. “
பிரியமான பிள்ளை…
மூன்று வருடமும் அவ்வளவு திட்டுக்கள் திட்டியிருப்பேன்…
முக்கிமாக ear phone க்காகத்தான்.
வகுப்பில் நுழையும் வரை காதில் ear phone வைத்து பாட்டு கேட்டுக் கொண்டே இருப்பான் . சரியாக வகுப்பு ஆரம்பிக்கையில் எடுத்துவிட்டு , வகுப்பு முடிந்த மறு நொடி மறுபடியும் காதில் போட்டுக் கொள்வான்.
உனக்கு இது பெரும் நோயாக போய் விட்டது என கடிந்து கொள்வேன்.
தேர்விற்கு கடைசி 10 நாட்கள் அவன் உழைத்த உழைப்பு கடுமையான உழைப்பு.
காலை பத்து மணிக்கு வகுப்பு ஆரம்பித்தால் மாலை ஆறு மணிக்குத்தான் விடுவேன் .
பிள்ளை அசையாமல் உட்கார்ந்து கணக்குகள் போட்டுக் கொண்டே இருந்தான்.
எனக்கே பாவமாக இருந்தது.
இதோ பிள்ளை என்னைப் பார்க்க வந்திருக்கிறான்.
ஒரு அழகான புடவையும் அவனின் அம்மா வாங்கிக் கொடுத்தனுப்பி இருக்கிறார்.
மனதெல்லாம் மகிழ்ச்சி எனக்கு.
அறிவுரைகள் கொடுத்தேன்.
பொறுமையாக கேட்டுக் கொண்டான்
தலை அசைத்தான்.
ஆசிகள் பெற்றுக் கொண்டு புறப்பட்டான்
எனக்குத்தான் அழுகை வந்தது.
நிறைய வெற்றிகளுடன் மறுபடி வருவான் என மனதை அமைதிப் படுத்திக் கொண்டேன்.
இரண்டு நாட்களுக்கு முன் ஓர் பிள்ளை கோவை PSG கிளம்பிச் சென்றான்.
இன்று ஓர் பிள்ளை ஸ்பெயினுக்கு கிளம்புகிறேன் என அலைபேசியில் விடை பெற்றுக்கொண்டான்.
பெருமிதமாக இருக்கிறது..
என்ன சாதித்தாய் இப்பூமியில் என அந்த இயற்கை அன்னை என் வாழ்வின் இறுதி மணித்துளியில் என்னிடம் கேட்பாள்..
“ஆயிரம் ஆயிரம் பிள்ளைகளை பெற்றேன். அவர்கள் மனதினில் இருக்கிறேன் . இது போதும் எனக்கு “
என இயற்கை அன்னை யிடம் சொல்லி விட்டு அவள் மடியில் அமைதியாக துயில் கொள்வேன்..
Lakshmi RS

Post a Comment