ரணில், கம்மன்பிலவின் எச்சரிக்கைக்கு அரசாங்கத்தின் பதில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் வெளியிட்ட கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
"இலங்கை தற்போது 6 பில்லியன் அமெரிக்க டொலர்களையே கையிருப்பாகக் கொண்டுள்ளது. 2028 ஆம் ஆண்டு வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்தும்போது இந்த கையிருப்பு 15 பில்லியன்களாக இருக்க வேண்டும். எனவே அரசாங்கம் இன்னும் 9 பில்லியன் டொலர்களை கையிருப்பாகக் கொண்டுவர வேண்டும்; இல்லையேல் நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்குச் செல்லும்" என்று ரணிலும் கம்மன்பிலவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
எனினும் இதனை மறுத்து, இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு மற்றும் பொருளாதாரம் குறித்து நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த கருத்து தெரிவித்துள்ளார்.
பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தல், கடன்களைத் திருப்பிச் செலுத்துதல் மற்றும் இறக்குமதித் தடைகளைத் தளர்த்துதல் ஆகியவற்றுடன், இலங்கை தனது வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பை எதிர்பார்த்ததை விட விரைவாகக் கட்டியெழுப்ப முடிந்துள்ளதாக பிரதி அமைச்சர் அனில் ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார நடவடிக்கைகளால் ஏற்பட்ட முன்னேற்றத்தின் காரணமாக, ஆரம்பத்தில் சர்வதேச நாணய நிதியத்தால் (IMF) கணிக்கப்பட்ட கையிருப்பு இலக்குகளை விடவும் சிறப்பான முன்னேற்றத்தை அடைய முடிந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் வாகன இறக்குமதிக்கு எவ்வித ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. எனினும் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிப்பதற்காக அரசாங்கம் பின்னர் அந்தத் தடைகளைத் தளர்த்த முடிவு செய்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, தற்போது சுமார் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான நாணயக் கடிதங்கள் (Letters of Credit - LC) திறக்கப்பட்டுள்ளன. அந்த வாகன இறக்குமதிகள் அனுமதிக்கப்பட்டிராவிட்டால், இலங்கையின் கையிருப்பு மேலும் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகமாக இருந்திருக்கும்.
இருப்பினும், வெளிநாட்டு கையிருப்பைச் சுமார் 6.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பராமரிக்க அரசாங்கத்தினால் முடிந்துள்ளது.
இந்த நிலையில், வெளிநாட்டு கையிருப்பு நிலையை மீண்டும் கட்டியெழுப்பும் அதேவேளையில், இலங்கை தனது வெளிநாட்டுக் கடமைகளைத் தொடர்ந்து நிறைவேற்றி வருவதாகவும் பிரதி அமைச்சர் எடுத்துரைத்தார்.
எரிபொருள் இறக்குமதியும் நாட்டின் வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பு மீது தொடர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எரிபொருள் இறக்குமதிக்காகக் கணிசமான அளவு கையிருப்பு வெளியேறுகிறது; இவை தவிர்க்க முடியாத செலவுகளாகும்.
இதன் காரணமாக, பொருளாதாரச் செயல்திறனை அளவிடும் ஒரே அளவுகோலாக மட்டும் பார்க்காமல், வெளிநாட்டு கையிருப்புகளை முதன்மையாக ஒரு பாதுகாப்பு அரணாகப் பார்க்க வேண்டும் என அனில் ஜயந்த வலியுறுத்தியுள்ளார்.
பொருளாதாரச் செயற்பாடுகளை உயிர்ப்புடன் வைத்திருக்கும் அதேவேளையில், வளர்ச்சியைக் குன்றச் செய்யாமல் இந்த பாதுகாப்பு அரணை அரசாங்கம் கட்டியெழுப்பி வருகிறது என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நிகர வெளிநாட்டு கையிருப்பின் வளர்ச்சியே இலங்கையின் முக்கிய இலக்காக உள்ளது. இதன்படி, விவேகமான மத்திய வங்கி முகாமை மற்றும் நிதித்துறை ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகள் மூலம் இந்த இலக்கில் முன்னேற்றம் அடையப்பட்டுள்ளதாகவும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

Post a Comment