Header Ads



டாக்டர். பஷீர் ரிஷ்கான், மலேசியாவில் பேராசிரியராக நியமனம்


யாழ் மண்ணிலிருந்து தூவப்பட்ட விதை ஒன்று புத்தளத்தில் புத்துயிர்ந்து, பெருவிருட்சமாய் வளர்ந்து, சமூக அடையாளமாக திகழும் ஆசான் டாக்டர் பஷீர் ரிஷ்கான் அண்மையில் மலேசியாவில் பேராசிரியராக நியமனம் பெற்றார். 


இவர் 1977 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் திகதி யாழ் முன்னாள் உதவி மேயர் மர்ஹூம் M.G. பஷீர் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியை திருமதி சுல்பா பஷீர் தம்பதியினரின் இறுதிப் புதல்வனாக யாழ்ப்பாணத்தில் பிறந்தார்.


சிறுவயதிலிருந்தே சிறந்த கல்விப் பின்புலத்தை கொண்ட இவர் தனது தாய் தந்தையின் சிறந்த கல்வி வழிகாட்டுதலின் கீழும், "புலிக்கு பிறந்தது பூனையாகுமா?", "தாயை போல பிள்ளை நூலை போல சேலை" என்ற எச்சொற்றொடர்க்கும் ஏற்றாற் போல தனது தனிப்பட்ட அயராத முயற்சியினாலும் கல்வி தனை திறம்பட பெற்று, கற்று இன்று தன்னை பெற்றெடுத்த மண்ணுக்கும், தத்தெடுத்த மண்ணுக்கும் சமூக அடையாளமாக திகழ்கிறார்.


அந்தவகையில் இவரின் கல்வி வாழ்க்கையின் ஆரம்பமாக, தரம் 01 தொடக்கம் 08 வரை, பரியோவான் (St. Johns) கல்லூரியில் கற்று, 1990 இல் உள்நாட்டு யுத்தம் காரணமாக தனது குடும்பம் சகிதம் புத்தளத்திற்கு புலம்பெயர்ந்தார். புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியில் தரம் 09 இலிருந்து உயர்தரம் வரை கற்று, கணிதவியல் துறையில் அதிசிறந்த பெறுபேறுகளுடன் 1999 இல் பேராதனை பல்கலைக்கழகத்தில் நுழைவுச்சீட்டைப் பெற்றார். அதே சமயத்தில் கிடைத்த இன்னொரு வாய்ப்பை சுவீகரித்துக்கொண்ட இவர், இந்தியாவில் கணினி அறிவியல் (Computer Science) துறையில் கற்கும் சந்தர்ப்பம் கிட்டவே, பாரததேசம் சென்று 2002 இல் குறித்த துறையில் தனது பட்டப்படிப்பை செய்து முடித்தார்.


அங்கிருந்து தாயகம் திரும்பிய இவர், அந்நேர அரசாங்கத்தின், 2005 ஆம் ஆண்டு 40,000 பட்டதாரிகளை அரசு சேவையில் இணைக்கும் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், ஹமித் அல் ஹுசைனியா கல்லூரி / கொழும்பில் தனது கல்விச்சேவையின் முதற்கட்டமாக ஆசிரியப் பணியை ஆரம்பித்தார். அதற்கு தொடர்ச்சியாக தர்கா நகர் தேசிய கல்வியற் கல்லூரியில் Sri Lankan Teacher Educated Service ஆசிரிய கல்வியியலாளர் பணியை தொடர்ந்தார். குறித்த காலகட்டத்தில் தனது MED Master of Education கற்கையையும் செவ்வனே முடித்தார்.


அவரது அடுத்த கட்ட உயரிய இலக்காக கலாநிதி பட்டப்படிப்பிற்காக சீன நாட்டிற்கு இலங்கை உயர் கல்வி அமைச்சினூடாக சீன அரசாங்க புலமைப்பரிசிலினை பெற்று 2017 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக தனது முதுமானிப்பட்டத்தினையும் கணினித்துறையில் நிறைவு செய்தார்.


அதற்கு பின் மீண்டும் இலங்கையில் 2018 / 2019 இல் மகாவலி கல்வியியல் கல்லூரியில் தனது சேவையை ஆற்றினார்.


இறைவனின் உதவியோடு, தன் முயற்சியையும் சேவையையும் விட்டகழாத இவர் 2019 ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்று சீனாவின் "Three Gorges University இல் இணைப் பேராசிரியராக (Associate Professor ) 2022 ஆம் ஆண்டு வரை சேவையாற்றினார்.


அதன் பின்னர் 2022 ஆம் ஆண்டு மலேசியாவின் அல்புகாரி சர்வதேச பல்கலை (Computer Science and Informatics) துறையின் பீடாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு இன்று 2026 இல் பேராசியராக (Professor) உச்சம் பெற்று தனது சேவையை அதே பல்கலை கழகத்தில் திறம்பட செய்து வருகிறார்.


பேராசிரியர் டாக்டர் பஷீர் ரிஷ்கான் தனது இரு கண்களான யாழ் மற்றும் புத்தள சமூக உறவுகளுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதை அடிக்கடி நினைவுபடுத்துபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தனது சமுதாயம் சார்ந்து அதீத அக்கறை கொண்ட இவர் பல தரப்பட்ட மாணவர்களின் உயர்கல்வி வாழ்க்கைக்கு தற்பொழுதும் வழிகாட்டியாக இருந்து வருபவர். அதுமட்டுமல்லாது நிதியாலும் விதியாலும் வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு தன்னால் இயலுமான வழிகளில் உதவிகளை செய்து வருவதனை வழக்கமாக்கிக்கொண்டவர். 


தான் கற்ற கல்வியை பிறர் பெறச்செய்வது என்பது சிறந்த அறமென புரிந்து கொண்ட இத்தகைய ஆளுமைகள் சமூகத்தில் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இல்லை. சிறந்த சமூக முன்னோடியாக வலம் வரும் இவ்வாசானுக்கும் இவரது தாய் தந்தைக்கும், சகோதர, சகோதரிகள் மற்றும் இவரது குடும்பத்திற்கும் இறைவன் சிறந்த ஈடேற்றத்தை வழங்க வேண்டுமென பிரார்த்திப்போமாக!


இப்படிக்கு,


இவ்விருட்சத்தில் நிழல் பெற்றவன்


உமைர் ஹய்தி (புத்தளம்) - Albukhary International University



No comments

Powered by Blogger.