Header Ads



முஸ்லிம் சட்டத்தை உடனடியாக ரத்துசெய் - ஐ.நா. அலுவலகத்தில் முறைப்பாடு


ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட சிறுவர் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைக்கு முரணாகவும், இலங்கையின் அரசியலமைப்பை மீறும் வகையிலும் நீண்டகாலமாக நடைமுறையில் உள்ள முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகத்தில் (04) முறைப்பாடு ஒன்று கையளிக்கப்பட்டது.


சிங்கள ராவய தேசிய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் தலைமையிலான குழுவினர், குறித்த கோரிக்கையை முன்வைத்து இந்த முறைப்பாட்டை கையளித்தனர். 1951 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டமானது, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளைக் கூட விவாகம் செய்துகொள்ள அனுமதிப்பதன் மூலம், அது ஒரு சிறுவர் துஷ்பிரயோகமாகவே அமைகின்றது என்பதை வலியுறுத்தி இந்த முறைப்பாடு கையளிக்கப்பட்டது.


முறைப்பாட்டை கையளித்த பின்னர் சிங்கள ராவய தேசிய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 

                          

ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் உடன்படிக்கையின்படி, 18 வயது பூர்த்தியடையாத எவரும் சிறுவராகவே கருதப்படுகின்றனர். இனம், மதம், சாதி, குலம் அல்லது அரசியல் பின்னணி என எதுவாக இருந்தாலும், இந்த அடிப்படை வரையறையில் எந்த மாற்றமும் இருக்க முடியாது. ஆனால், இலங்கையில் நடைமுறையில் உள்ள 1951 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டமானது, எமது நாடு ஏற்றுக்கொண்டுள்ள சர்வதேச உடன்படிக்கையை முற்றாக மீறும் வகையில் அமைந்துள்ளது.Beaches & Islands


குறிப்பாக, இந்தச் சட்டத்தின் கீழ் குவாஸியின் அனுமதியுடன் 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளைக்கூட விவாகம் செய்து கொள்வதற்கு இடமளிக்கப்படுகிறது. இது சிறுவர் உரிமைகளை மட்டுமன்றி, சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு வழிவகுக்கும் ஒரு பாரதூரமான செயற்பாடாகும். நாட்டின் பொதுவான சட்டத்துக்கு அமைய, முஸ்லிம் அல்லாத ஒரு நபர் 17 வயதுடைய ஒருவருடன் பாலியல் ரீதியாகத் தொடர்புபட்டால், அவர் சட்டத்தின் முன் குற்றவாளியாக்கப்பட்டு 10 அல்லது 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைக்கு உள்ளாக்கப்படுகிறார். அவ்வாறிருக்கையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு மாத்திரம் இத்தகைய சட்ட ரீதியான சலுகைகளை வழங்கி, நாட்டின் பொதுச்சட்டத்தை விஞ்சும் இத்தகைய செயற்பாடுகளுக்கு அனுமதிப்பது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்.


மத ரீதியாகவோ அல்லது இன ரீதியாகவோ நாட்டின் சட்டங்களை மாற்றியமைக்க முடியாது. அனைத்துப் பிரஜைகளும் சட்டத்தின் முன் சமமானவர்களே. இத்தனை காலமும் இவ்வாறானதொரு சட்ட ஏற்பாடு எவ்விதம் நடைமுறையில் இருந்தது என்பது எமக்கு பாரதூரமான கேள்வியாக உள்ளது. இது சிறுவர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேசக் கடப்பாட்டையும், நாட்டின் அதியுயர் சட்டமான அரசியலமைப்பையும் மீறும் ஒரு செயற்பாடாகும்.


எனவே, இந்தச் சட்ட ஏற்பாடுகளை வன்மையாகக் கண்டிப்பதோடு, சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு வித்திடும் இந்த சட்டத்தை உடனடியாக ரத்து செய்வதற்குத் தேவையான துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையிடமும், அரசாங்கத்திடமும் நாம் வலியுறுத்துகிறோம். இது தொடர்பான சட்ட ரீதியான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், இந்த அநீதியான சட்டத்தை இல்லாதொழிக்கவும் எமது ராவய அமைப்பு தீர்மானித்துள்ளது என்றார்.

No comments

Powered by Blogger.