Header Ads



இலங்கையில் பேரழிவாக மாறியுள்ள "மரண விபத்துக்கள்"


வருடாந்தம் இடம்பெறும் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 676 மரண விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல குறிப்பிட்டுள்ளார். 


வீதி விபத்துக்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் கூறினார். 


அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல, 


"மரண விபத்துக்கள் ஒரு பேரழிவாக மாறியுள்ளன. அவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஒப்பிட்டுப் பார்த்தால், மரண விபத்துக்கள் 74 ஆல் அதிகரித்துள்ளன; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆல் அதிகரித்துள்ளது. வீதிகளின் தரம், கவனக்குறைவாக வாகனம் செலுத்துதல், அதிவேகம் மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்துதல் ஆகியவையே இதற்கு முக்கிய காரணங்களாகும். உயிரிழப்பவர்களில் அதிகமானோர் பாதசாரிகளாவர். ஏப்ரல் 5 ஆம் திகதி வரை 230 பாதசாரிகளும், 247 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் உயிரிழந்துள்ளனர்." என்றார். 


இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் மணில்க சுமனதிலக, வீதி விபத்துக்களினால் உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்களே எனச் சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.