Header Ads



புஹாரியின் வீட்டில் காவலராக செயற்படும் பூனை



ஓட்டமாவடி, தியாவட்டவான் பகுதியில் உள்ள ஒரு சாதாரண பூனை, தனது உரிமையாளரின் தொழிலுக்கு ஒரு ஊழியரைப் போல உதவி செய்து அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.


ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட தியாவட்டவான் பிரதான வீதியில் ஏ.எப்.எச். எனும் பெயரில் மீன் கடை நடத்தி வரும் முகம்மட் முஸ்தபா புஹாரி, 2019 ஆம் ஆண்டு முதல் இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறார். ஆரம்ப காலங்களில், அவர் வெளியூர்களுக்கு அனுப்புவதற்காக ரெஜிபோம் பெட்டிகளில் சேமித்து வைக்கும் மீன்களை, எலிகள் கடித்துச் சேதப்படுத்தி வந்தன. இதனால் அவருக்குப் பாரிய பொருளாதார நஷ்டம் ஏற்பட்டு வந்தது.


எலிகளைக் கட்டுப்படுத்த எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், தற்செயலாக ஒரு பெண் பூனை அவரது கடைக்கு வந்துள்ளது. ஏனைய பூனைகள் சென்ற போதிலும், இந்தப் பூனை மட்டும் அவரிடம் நீண்ட காலப் பழக்கம் உடையது போல நெருக்கமாகியுள்ளது.


கடையில் புகுந்து மீன்களையும் பெட்டிகளையும் சேதப்படுத்திய எலிகளை இந்தப் பூனை வேட்டையாடி விரட்டியுள்ளது. கடையில் குவித்து வைக்கப்பட்டுள்ள மீன்களை அதுவாகத் திருடி உண்ணாமல், உரிமையாளர் புஹாரி கொடுக்கும் மீன்களை மாத்திரமே உணவாகக் கொள்கிறது.


கடைக்கு வரும் வாடிக்கையாளர்களைக் கண்டு மிரண்டு ஓடாமல், அமைதியாக இருந்து அனைவரையும் கவர்ந்து வருகிறது. ஒரு ஊழியரைப் போலச் செயற்பட்டு, எலிகளின் தொல்லையை முழுமையாக நீக்கி புஹாரியின் தொழில் முன்னேற்றத்திற்குப் பெரும் பங்காற்றி வருகிறது.


இது தொடர்பில் உரிமையாளர் புஹாரி “எலிகளின் தொல்லையினால் எனது தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தைத் தடுத்து, தற்போது ஒரு ஊழியரைப் போல இந்தப் பூனை எனக்கு உதவி வருகிறது. இதன் மூலம் எனது தொழில் தற்போது சிறப்பாக நடைபெறுகிறது” என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.