Header Ads



முஸ்லிம் விவாகம், விவாகரத்துத் திருத்தச் சட்டத்திற்கு மக்களின் கருத்துக்கள் கோரப்படுகிறது (முழு விபரம்)


முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்துச் சட்டத்திற்கு மறுசீரமைப்புக்களை அறிமுகம் செய்ய வேண்டியதன் அவசியத்தன்மையைக் கவனத்தில் கொண்டு, 1951 இன் முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்துத் (திருத்த)ச் சட்டத்திற்கான மறுசீரமைப்புக்கள் தொடர்பாக பொது மக்களின் கருத்துக்கள்/ யோசனைகளை வினவி, ஆராய்வதற்காக, நீதி அமைச்சர், முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்துச் சட்டத்திற்கான மறுசீரமைப்புக் குழுவுக்கு அதிகாரம் வழங்கியுள்ளார்.


ஏனைய விடயங்களில், குழுக் கலந்துரையாடல்களின் விளைவாக மற்றும் இந்த விடயம் தொடர்பிலான முன்னைய அறிக்கைகள் மற்றும் அல்லது எழுத்து மூலமான சில யோசனைகளையும் கவனத்தில் கொண்டு பின்வரும் விடயங்கள் தொடர்பிலான மறுசீரமைப்புக்களுக்கு ஏற்கெனவே யோசனைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.


விவாகத்தை கட்டாயமாகப் பதிவு செய்வதை அறிமுகம் செய்தல்,


விவாகத்திற்காக மணப்பெண் கையொப்பமிடுதல் மற்றும் இணக்கத்தைத் தெரிவித்தல்.


ஒரு தரப்பினர் மாத்திரம் இலங்கையராக உள்ள போதிலும், முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்து சட்டத்தின் கீழ் விவாகத்திற்கு அங்கீகாரம் பெற்றுக் கொள்ளல், முன்விவாக உடன்படிக்கையை ஏற்றுக் கொள்ளல்,


விவாகம் செய்துகொள்ளும் சந்தர்ப்பத்தில்/ விவாகரத்து செய்யும் சந்தர்ப்பத்தில் பரிமாற்றிக் கொள்ளும் வரதட்சணை மற்றும் வேறு ஏதேனும் பணம் அல்லது சொத்து கொடுக்கல் வாங்கல்களை நியாயமாக அறவிட்டுக் கொள்வதற்கு வசதி செய்தல்,

விவாகரத்துச் செய்யும் சந்தர்ப்பத்தில், விவாகமாகியிருந்த காலத்தில் பெற்றுக் கொண்டுள்ள சொத்துக்களை நியாயமாக பகிர்ந்தளித்தல்,


பரஸ்பர விருப்பத்தின் பேரில் விவாகரத்தை ஏற்றுக் கொள்ளல்,


விவாகரத்து வழக்கு நடவடிக்கைகளின் போது பிள்ளைகளின் உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்குதல்,


“மஹர்” (கொடுப்பனவு) ((Mata’a) (alimony)) தொடர்பான உத்தரவுகளுக்கு ஏற்பாடு செய்தல்,


பராமரிப்பு பற்றிய உத்தரவுகளை வெளியிடும் போது சகல முரண்பாடுகளையும் நீக்குவதற்காக நீதவான் நீதிமன்றத்திற்கு நியாயமான பராமரிப்புச் செலவினம் மற்றும் பராமரிப்புத் தொகைகளை அறவிட்டுக் கொள்வது தொடர்பான தகவுதிறன்களை அறிமுகம் செய்தல்,


1951 ஆம் ஆண்டின் முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்து (திருத்த) சட்டத்திற்கான மறுசீரமைப்புக்கள் பற்றி பொது மக்களின் கருத்துக்கள்/ யோசனைகளை, குழு வெகுவாக வரவேற்கின்றது என்பதுடன், குறிப்பாக கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையத்தளத்தில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஐந்து துறைகள் தொடர்பில் பொது மக்களின் கருத்துக்கள்/ யோசனைகளை சமர்ப்பிக்குமாறும் குழு கோரிக்கைவிடுக்கின்றது.


சகல கருத்துக்கள்/ யோசனைகளையும் 2026 மார்ச் 01 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பித்தல் வேண்டும்.


மேலதிக விபரங்களுக்கு மற்றும் உங்களின் அவதானிப்புகள்/ கருத்துகள்/ பிரேரணைகளை சமர்ப்பிக்கும் பொருட்டு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் www.moj.gov.lk எனும் இணையத்தளத்திற்குப் பிரவேசிக்கவும்.


தகவல்களை சமர்ப்பிக்கும் போது தயவு செய்து கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் “முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்துச் சட்டத்திற்கான மறுசீரமைப்புக்கள் பற்றிய பொது மக்களின் கருத்துக்களைக் கோரல்” எனத் தெளிவாகக் குறிப்பிட்டு பின்வரும் முகவரிக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.


அல்லது உங்களது கருத்துகளை legal@moj.gov.lk எனும் மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் அனுப்பிவைக்க முடியும்.


செயலாளர்

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு

இல. 19, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை,

கொழும்பு 10.

No comments

Powered by Blogger.