சாரா ஜாஸ்மின் என்ற புலஸ்தினி இறந்துவிடவில்லை - அமைச்சர் ஆனந்த
2019 ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய சாரா ஜாஸ்மின் என்றும் அழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் இறந்துவிடவில்லை என்பது விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளது என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால , பாராளுமன்றத்தில் இன்று (07) தெரிவித்தார்.
சாரா ஜாஸ்மின் தற்போது இந்தியாவில் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. தேவைப்பட்டால், அவரைக் கைது செய்வதற்கான பிடிவிறாந்தை பெற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஏற்கனவே சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜேபால கூறினார்.
தாக்குதல்களுக்குப் பின்னால் சதி இருக்கிறதா என்று புதிய அரசாங்கம் விசாரித்து வருவதாகவும், விசாரணையை ஓர் ஆழமான விசாரணை என்று விவரித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். சில விவரங்களை பாராளுமன்றத்தில் வெளியிட முடியாது, ஏனெனில் அவ்வாறு செய்வது நடந்து கொண்டிருக்கும் விசாரணைகளுக்கு இடையூறாக இருக்கும் என்றார்.

Post a Comment