இஸ்லாமிய எதிர்ப்பு மேலோங்கியுள்ளது - பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ள உஸ்மான் கவாஜா
சிட்னியில் நடைபெறவுள்ள ஐந்தாவது ஏஷஸ் டெஸ்ட் போட்டியே இவரது இறுதிப் போட்டியாகும்.
அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடிய முதல் முஸ்லிம் வீரரான அவர், தனது இறுதிப் போட்டியின் போது மௌனமாக இருக்க விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் போது தனக்கு ஏற்பட்ட முதுகு வலி காயத்தை ஊடகங்களும் முன்னாள் வீரர்களும் கையாண்ட விதம் குறித்து அவர் அதிருப்தி வெளியிட்டார்.
ஜோஷ் ஹசில்வுட் அல்லது நதன் லயன் போன்ற வீரர்கள் காயமடைந்தால் மக்கள் பரிதாபப்படுவதாகவும், ஆனால் தான் காயமடைந்த போது தனது நம்பகத்தன்மை தாக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானியர்கள், மேற்கிந்திய தீவு வீரர்கள் அல்லது கறுப்பின வீரர்கள் காயமடைந்தால், அவர்கள் "சோம்பேறிகள், சுயநலவாதிகள் அல்லது கடினமாக உழைக்காதவர்கள்" என்ற இன ரீதியான முத்திரைகள் குத்தப்படுவதாக அவர் சாடினார்.
மற்ற வீரர்கள் மது அருந்திவிட்டு அல்லது பொழுதுபோக்குகளில் ஈடுபட்டு காயமடைந்தால் அவர்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை என்றும், தனக்கு மட்டும் வேறு விதமான அளவுகோல்கள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் இன்னும் "மிகவும் வெள்ளையினத்தவர்" சார்ந்ததாகவே இருப்பதாகவும், இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வு இன்னும் மேலோங்கி இருப்பதாகவும் அவர் பகிரங்கமாகத் தெரிவித்தார்.
தன்னை விமர்சிப்பவர்கள் மீண்டும் "இனவாத அட்டையை" பயன்படுத்துவதாகக் கூறுவார்கள் என்று தெரிந்தே இதைப் பேசுவதாக அவர் குறிப்பிட்டார்.
அடுத்த தலைமுறை உஸ்மான் கவாஜாக்களின் பயணம், ஒரு 'ஜோன் ஸ்மித்' என்பவரின் பயணத்தைப் போலவே சமமானதாக அமைய வேண்டும் என்பதே தனது விருப்பம் என அவர் தெரிவித்துள்ளார்.
"மக்களின் செம்பியன்" என்று தன்னை அழைத்துக்கொள்ளும் கவாஜா, மற்றவர்கள் பேசத் தயங்கும் உண்மைகளைத் தான் பேசுவதாகவும், எதிர்கால வீரர்களுக்காகவே இந்த மாற்றங்களைக் கோருவதாகவும் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

Post a Comment