டிட்வா சூறாவளியினால் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடமைப்புத் தொகுதி
டிட்வா சூறாவளியினால் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடமைப்புத் தொகுதிகளை நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். இன்று (22) அமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
சூறாவளி காரணமாக 6,000க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாகவும், ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. வீடுகள் சேதமடையாவிட்டாலும், சில பகுதிகள் தொடர்ந்தும் வசிப்பதற்கு பாதுகாப்பற்றவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்தகைய பகுதிகளில் உள்ள மக்களை மீள்குடியேற்றுவது கட்டாயமாகும்.
பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைக் குறுகிய காலத்திற்குள் வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். பல இடங்களில் வீடமைப்புத் தொகுதிகளை நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மீண்டும் இவ்வாறானதொரு அனர்த்தம் ஏற்படும்போது பாதிப்புகளைத் தவிர்க்கும் நோக்கில், அதிக அவதானமிக்க பகுதிகளில் உள்ள மக்களைப் பாதுகாப்பான இடங்களில் குடியேற்ற முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment