நீர்கொழும்பு மாநகர சபை - NPP வரவுசெலவு திட்டம் நிறைவேற்றம்
- இஸ்மதுல் றஹுமான் -
நீர்கொழும்பு மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் கன்னி வரவு செலவு திட்டம் எதிர் கட்சி உறுப்பினர்களின் வாக்கெடுப்பை கோறும் தெளிவின்மையால் நிறைவேற்றப்பட்டதாக சபைக்கு அறிவிக்கப்பட்டது.
நீர்கொழும்பு மாநகர சபையின் விஷேட அமர்வு நேற்று 22 ம் திகதி காலை 10 மணிக்கு மேயர் சட்டதரணி ரொபட் ஹீன்கெந்த தலைமையில் இடம்பெற்றது. 2026 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை முதல்வர் ஹீன்கெந்த முன்வைத்து உரையாற்றினார்.
இது தொடர்பான விவாதத்தில் ஆளும்கட்சி,எதிர்கட்சி உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன் வைத்தனர்.
இறுதியாக மேயர் பஜட் தொடர்பான தனது பதில் உரையை நிகழ்த்தி முந்தவுடன் சபை நடவடிக்கைகள் முடிவுற்றதாக அறிவித்தார்.
இதன் பின்னர் எதிர் கட்சி உறுபினர்கள் வாக்கெடுப்பை கோரினர். அப்போது மேயர் சபையில் பதில் உரையாற்ற முன்னர் வாக்கெடுப்பை கோர வேண்டும். அதுவே உள்ளூராட்சி மன்ற சட்டமூலத்தில் உள்ளது. நீங்கள் யாரும் உரையாற்றும் போதும் வாக்கெடுப்பை வேண்டி நிற்கவில்லை. நான் சட்டத்தின் அடிப்படையிலேயே செயலாற்றுகிறேன் என்றார்.
ஐமச உறுப்பினர் என்.எம். நுஸ்ரி இங்குள்ளவர்கள் புதிய உறுப்பினர்கள் எனவே சந்தர்பத்தை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு பதில் அளித்த முதல்வர் ஹீன்கெந்த நீங்கள் புதியவர் என்றால் உங்களை உங்கள் கட்சி அறிவுறுத்தியிருக்க வேண்டும். சபை நடவடிக்கை முடிந்த பின்னர் மீண்டும் சபையை கூட்டும் அதிகாரம் எனக்கு இல்லை எனக் கூறி எழுந்து சென்றார்.
2026 ம் ஆண்டுக்கான நீர்கொழும்பு மாநகர சபையின் வரவு செலவு திட்டம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

Post a Comment