Header Ads



பாலியல் கல்வியை எப்படி கற்றுக் கொடுப்பீர்கள்..? மல்கம் ரஞ்சித் கடும் எதிர்ப்பு


பொருத்தமற்ற பாலியல் கல்வியை பாடசாலை பாடத்திட்டத்தில் உள்ளடக்குவதன் மூலம் சிறுவர்களைத் தவறான வழியில் திசைதிருப்பும் திட்டம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.


மீரிகம, கீணதெனிய பகுதியில் புனரமைக்கப்பட்டுள்ள புனித ஸ்டீபன் தேவாலயத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துகளை வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார்.


"இப்போது சிறுவர்களுக்கு ஆறாம் தரம் முதல் பாலியல் கல்வி வழங்க ஒரு புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறதாம். இந்த விடயங்கள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க செயலமர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்தக் கல்வித்திட்டத்தில் குறிப்பாக, தன்பால் உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது பற்றியும், பிறப்புக் கட்டுப்பாடு பற்றியும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளதாம்.


இத்தகைய அனைத்து விடயங்களுக்குப் பின்னாலும் இருப்பது, நம் நாட்டைக் கெடுக்கத் துடிக்கும் சர்வதேச அமைப்புகளே , குறிப்பாக ஐக்கிய நாடுகள் குடும்பக் கட்டுப்பாட்டு சங்கம் இந்தக் கல்வி அமைச்சுக்கு பணம் கொடுத்து, அதற்கான புத்தகங்களை அச்சிட்டு, இன்று இலங்கையில் இந்தப் பிள்ளைகளைத் தவறான வழியில் கொண்டு செல்லும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.


இந்த நாகரிகமற்ற விடயங்களை நம் பிள்ளைகளுக்குக் கற்பிக்கச் செல்ல வேண்டாம். நல்லது கெட்டது தெரியாத இந்தப் பிஞ்சுகளைத் தவறான வழியில் கொண்டு செல்ல கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்தால், நாம் அதை முழுமையாகக் கண்டிக்க வேண்டும்.


இத்தகைய விடயங்களை குழந்தைகளுக்குத் தேவைப்படும்போது எடுத்துரைக்கும் பொறுப்பு பெற்றோர்களுக்கே உரியது, இது கல்வி அல்ல, இது திசைதிருப்பும் செயலாகும்.


அடுத்த வருடம் ஜனவரி மாதம் 27ஆம் திகதி முதல் இந்தப் பாடங்கள் பாடசாலைகளில் கற்பிக்கப்பட உள்ளனவாம். "நாகரிகமான ஒரு அரசாங்கம் இவ்வாறான விடயங்களுக்கு எப்படி இடமளிக்கிறது? நம் கலாசாரத்தையும் நாகரிகத்தையும் அழிக்க அனுமதிக்க முடியாது. நம் நாட்டை ஆளும் தலைவர்கள், "நம் நாட்டின் கலாசாரம், நாகரிகம், மதம் ஆகியவற்றை பாதுகாக்க தைரியமாக முன்நிற்க வேண்டும்.


இந்த விடயங்களை அமைச்சு அதிகாரிகளின், சில மருத்துவ சங்கங்களின், அல்லது சில சட்டத்தரணி சங்கங்களின் விருப்பப்படி திசை திருப்ப இடமளிக்க வேண்டாம்" என்று ஜனாதிபதியிடமும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

No comments

Powered by Blogger.