Header Ads



எவ்வளவு சிரமமான வாழ்க்கை..? மனித உறவுகளும் இப்படித்தான்...


முள்ளம்பன்றிகளின் முட்கள் எதிரிகளிடமிருந்து மட்டுமல்ல, அவற்றின் சொந்த இனத்தால்கூட நெருங்க முடியாத கோட்டையை உருவாக்குகின்றன.


ஆம். கடும் குளிர் காலத்தில் அவை ஒன்றையொன்று நெருங்கி வந்து அரவணைப்பைத் தேடும் கட்டாய நிலைக்குத் தள்ளப்படுகின்றன.


அப்போது முட்களின் வலியையும் அவற்றின் கூர்மையையும் அவை தாங்கிக் கொள்கின்றன. ஓரளவு சூடாக உணர்ந்தால் விலகிச் செல்கின்றன. பின்னர் மீண்டும் நெருங்கிச் செல்கின்றன.


இவ்வாறு நெருங்குவது, விலகிச் செல்வது என குளிர்கால இரவுகளை அவை கழிக்கின்றன.


தொடர்ச்சியான நெருக்கம் உடலில் காயத்தை ஏற்படுத்தக்கூடும். நிரந்தரமாக விலகிச் சென்றால் உயிரை இழக்கக் கூடும்.


எவ்வளவு சிரமமான வாழ்க்கை..?


மனித உறவுகளும் இப்படித்தான்.


நம்மைச் சுற்றியுள்ள முட்களில் இருந்து நம்மால் விடுபட முடியாது. அதேவேளை முட்களின் வலியை தாங்காவிட்டால் அரவணைப்பைப் பெறவும் முடியாது.


குறைகள் இல்லாத நண்பனைத் தேடுபவர் தனிமையில்தான் வாழ்ந்தாக வேண்டும்.


குறைகள் இல்லாத ஜோடியைத் தேடுபவர் பிரம்மச்சாரியாகத்தான் வாழ்ந்தாக வேண்டும்.


குறைகள் இல்லாத சகோதரனைத் தேடுபவர் தேடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.


குறைகள் இல்லாத உறவுகளைத் தேடுபவர் உறவுகளைத் துண்டித்தே வாழ்ந்தாக வேண்டும். 

 

உறவு இல்லையேல் துறவுதான். சமநிலைதான் வாழ்க்கை.


எனவே நிம்மதியாக வாழ விரும்பினால், அனைத்தையும் துருவித் துருவி ஆராயாதீர்கள்.


கண்ணுக்குத் தெரியும் நன்மைகளை மட்டும் பாருங்கள். தெரியாத விஷயங்களை படைத்தவனிடம் விட்டுவிடுங்கள்.


நற்பண்புகள் கண்ணை மறைக்கும் அளவுக்கு, அடுத்தவர் குறைகளைத் தேடாதீர்கள். 


 நூஹ் மஹ்ழரி ✍️

No comments

Powered by Blogger.