Header Ads



1,338 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்


கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தின் ஊடாக 1,338 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 


நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு சுய போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் கடந்த 3 ஆம் திகதி சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கான கருமபீடம் ஒன்றும் நிறுவப்பட்டது. 


இதற்கு முன்னர், வெளிநாட்டினர் சாரதி அனுமதிப் பத்திரங்களைப் பெற வேரஹேரவில் உள்ள மோட்டார் வாகன ஆணையாளர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. 


இந்நிலையில் கடந்த 3 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 1,338 சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 7 ஆம் திகதி அதிகளவான சாரதி அனுமதிப் பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


இதேவேளை, நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு 2,000 ரூபாய் என்ற குறைந்த கட்டணத்தில் சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவது தொடர்பில் இலங்கை சுற்றுலா சாரதிகளின் ஒன்றியம் எதிர்ப்பு வௌியிட்டுள்ளது. 


குறித்த நடைமுறை காரணமாக, அந்த தொழிலை நம்பியிருப்போர் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக அந்த சங்கத்தின் பிரதிநிதி அமில கோரலகே குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.