ரணில் என்பவர் உலகை விழுங்கிவிட்டு, தண்ணீர் குடிக்காமல் இருக்கக்கூடிய ஒரு மனிதர்
கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியில் முதன் முதலாக தானே உரம் தொடர்பான பிரச்சினையை வெளிக்கொணர்ந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய -20- அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போனதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
பதுள்ளையில் ஒரு வழக்கில் என் மீது குற்றம் சுமத்தப்பட்டு அதற்கு பிணை வழங்கும் போது மீண்டும் கொழும்பில் என் மீது வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது.
எனது மனைவி ரணில் விக்ரமசிங்கவிடம் சென்று எனக்கு பிணை கிடைக்க உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கின்றனர்.
ரணில் விக்ரமசிங்க அவரது மனைவி சொல்வதையே செய்ய மாட்டார் என்ற நிலையில், எனது மனைவி சொல்வதை செய்வாரா?
ரணில் விக்ரமசிங்க என்பவர், உலகை விழுங்கி விட்டு தண்ணீர் குடிக்காமல் இருக்கக் கூடிய ஒரு மனிதர்.
நாங்கள் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து நாட்டை பொறுப்பேற்ற போது டொலர் கையிருப்பு 200 மில்லியன் ஆகும்.
ஆனால், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் நாம் நாட்டை ஒப்படைத்த போது, டொலர் கையிருப்பு 6 பில்லியனாக இருந்தது. அதனை அவரும் ஒப்புக்கொண்டார்.
நாங்கள் ஆட்சியில் இருந்த போது, உப்பு இருந்தது. தற்போது உப்பும் இல்லை ஒன்றும் இல்லை. உப்பை விநியோகிக்க முடியாது என்றால் முடியாது என்று ஒப்புக்கொள்ளுங்கள்.
வெள்ளையர்கள் இந்த நாட்டை பிடித்த போது, தெற்கை சேர்ந்த மக்கள் உப்பை எடுத்துக் கொண்டு சென்று மலைநாட்டில் தங்களின் வாழ்க்கையை தொடர்ந்தனர்.
இந்நாட்டின் வரலாற்றில் எந்தவொரு காலத்திலும் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதில்லை. ஆனால், இந்த அரசாங்கத்தின் காலத்தில் முதல் முறையாக ஏற்பட்டுள்ளது.
அரகலய போன்ற ஒரு மாபெரும் போராட்டம் நடந்ததாலேயே உங்களுக்கு இலட்சக் கணக்கான வாக்குகள் கிடைத்தன. இல்லை எனில் நீங்கள் உள்ளூராட்சி சபைகளில் கூட தெரிவாக மாட்டீர்கள்.
அத்துடன், மாலை 5 மணிக்கு விசாரணை குழுக்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள், நாளை யாரின் மீது விசாரணையை நடத்தலாம் என்று கலந்துரையாடுகின்றார்கள்.
கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியில் முதன் முதலாக நான் தான் உரம் தொடர்பான பிரச்சினையை வெளிக்கொணர்ந்தேன். அதன் பின்னரே அது ஒரு முக்கிய பிரச்சினையாக மாறி ஆட்சி கவிழ்ந்தது.
அதுபோல, எங்களை சிறைக்கு அனுப்ப யோசிக்காமல் நாம் தற்போது முன்வைக்கும் குறைபாடுகளையும் கவனத்தில் எடுத்து அவற்றை திருத்தி கொள்ளுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.
Post a Comment