Header Ads'இன்னார் விபச்சாரத்தில் ஈடுபட்டார்' என்று பொது வெளியில் கதைப்பது பெரிய குற்றம்


விபச்சாரம் எவ்வளவு பெரிய குற்றம்,  ஆனால் அதனை விடவும் பெரிய குற்றம் 'இன்னார் விபச்சாரத்தில் ஈடுபட்டார்' என்று பொது வெளியில் கதைப்பது.


விபச்சாரத்துக்கு ஒரு தண்டனையைச் சொல்லும் அல்குர்ஆன், நான்கு சாட்சிகள் இல்லாமல் அதனைப் பற்றிக் கதைத்துத் திரியும் ஒருவனுக்கு மூன்று தண்டனைகள் இருப்பதாகச் சொல்கிறது. தேவையானவர்கள் ஸூறா அந்-நூர் என்ன சொல்கிறது என்பதைப் படித்துப் பாருங்கள். இதனது அர்த்தம் நான்கு சாட்சிகள் இருந்தால் பொது வெளியில் சகட்டு மேனிக்குக் கதைத்துத் திரியலாம் என்பதல்ல.


'கண்ணால் நேரில் கண்ட சாட்சிகள் நான்கு பேர் தேவை' என்ற, சாத்தியப்பாடு மிகவுமே குறைந்த ஒரு நிபந்தனையே, குறித்த விஷயம் பொது வெளியில் பேசுபொருளாவதைத் தடுப்பதை நோக்காகக் கொண்டுதான் அறிமுகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அல்லாஹ்வே நன்கறிந்தவன்.


எங்கோ ஓரிடத்தில் நான்கு சுவர்களுக்கிடையில் நடக்கும் ஒரு மானக்கேடான அம்சம் சம்பந்தப்பட்டவர்களது தனிப்பட்ட பிரச்சினை. ஆனால் அது நான்கு பேர் பேசும் விஷயமாக மாறும் போதுதான் சமூகத்தை செல்லரிக்கும் ஒரு தீமையாக மாறுகிறது.


பகிரங்கத்தில் பேசப்படுவதால் எந்தத் தனிப்பட்ட தீமையையும் ஒழிக்க முடியாது. மாற்றமாக அவை இருப்பதை விடவும் வீரியமாக வளர்ச்சியே அடையும். 


மேற்படி அல்குர்ஆனிய வழிகாட்டல் கற்றுத் தரும் பாடம் இதுதான். அதாவது, மனிதர்களின் தனிப்பட்ட பாவங்களையும் தீமைகளையும் பொது வெளிதில் கதைத்துத் திரிவதால் அவை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுவதில்லை; மாற்றமாக, அவற்றின் பாரதூரம் ஐதாகி அந்தப் பாவங்களுக்கான விளம்பரங்களாகவே அவை மாறி விடுகின்றன.


'குர்ஆன் ஸுன்னா' என்று மூச்சுக்கு முப்பது தடவை உச்சரிக்கின்ற சிலருக்கு 'குர்ஆன் ஸுன்னா' என்ற அந்த இரண்டு வார்த்தைகளும் மட்டும்தான் தெரியும். அவற்றுக்குள் இருக்கின்ற அழகிய இஸ்லாம் என்ன என்பது பற்றி ஒரு மண்ணும் தெரியாது. 


'எடுத்தேன் கவிழ்த்தேன்' பாணியில், தங்கத்தையும், இரும்பையும், மரக்கறியையும் ஒரே தராசில் போட்டு நிறுக்கும் அடி முட்டாள்களே அவர்கள்.


உங்களது பார்வையில் ஒன்று பெரிதாகத் தெரிவதால், அது இஸ்லாத்தின் பார்வையிலும் பெரியது என்று நினைப்பதை விடவும் அறிவீனம் வேறேதும் இருக்குமா?!


தனிப்பட்ட மனிதர்களின் தெரிவுகளை அவர்களுக்கும் அல்லாஹ்வுக்குமிடையில் விட்டு விடுங்கள். யாராவது தனிப்பட்ட வாழ்வில் விடும் பிழைகள் காரணமாக உங்களுக்கு அவர் மீது கழிவிரக்கம் தோன்றினால், அவரை தனிப்பட்ட ரீதியில் அணுகி அழகிய முறையில் உபதேசம் செய்யுங்கள். முடியாவிட்டால் நீங்கள் மூடிக் கொண்டிருப்பதுதான் அதியுத்தமமான செயல். 


ஏனைய மனிதர்களின் உரிமைகளில் அத்துமீறல் இடம்பெற்றால், அல்லது பொது நலன்கள் பாதிக்கப்படும் பிரச்சினைகளாக இருந்தால்தான் அவை பொது வெளிக் கலந்துரையாடலுக்கு உரியவை.


அறிவு என்பது எல்லாவற்றைப் பற்றியும் கருத்துச் சொல்வதல்ல. எதிலெல்லாம் மூடிக் கொண்டிருக்க வேண்டும் என்ற தெளிவுதான் ஒருவனிடம் அறிவு இருப்பதற்கான அடையாளம்.


✍️ Affan Abdul Haleem

No comments

Powered by Blogger.