இஸ்ரேலின் சுதந்திரதின நிகழ்வில் பங்கேற்றது ஏன்..?
- அன்ஸிர் -
இலங்கை வெளிவிவகார அமைச்சர் என்ற அடிப்படையிலேயே, கொழும்பில் நடைபெற்ற இஸ்ரேல் நாட்டு சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்றதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை, 11 ஆம் திகதி வட்சப் மூலமாக வழங்கிய, சிறு செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
கடந்த 2 வருடங்களாக ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீன் குறித்து, இலங்கை தரப்பில் இருந்து ஒரு வார்த்தைதானும் கூறப்படவில்லை. எனினும் கடந்தமுறை நான் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய போது, பலஸ்த்தீனுக்கு ஆதரவான இலங்கையின் நிலைப்பாட்டை வலியுறுத்தினேன்.
கொழும்பில் நடைபெற்ற இஸ்ரேல் நாட்டு சுதந்திர நிகழ்வில், நான் பங்குகொண்டதை சிலர் அரசியல் இலாபத்திற்காக விமர்சிக்கிறார்கள். எனினும் இலங்கையானது, இஸ்ரேலுடன் ராஜதந்திர தொடர்புகளை பேணி வருகிறது. அதனால் இலங்கையில் அந்நாடு நிகழ்த்தும் நிகழ்வுகளுக்கு வெளிவிவகார அமைச்சுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால், நாட்டின் வெளிவிவகார அமைச்சர் என்ற வகையில் பங்கு பற்றினேன்.
இதன் அர்த்தம், நாங்கள் பலஸ்தீனுக்கு எதிரானவர்கள் என்பது அல்ல. இங்கு என்னைப் பற்றி விமர்சிப்பவர்கள் இஸ்ரேலுடன், இலங்கை ராஜதந்திர உறவுகளை கொண்டுள்ளது என்பதை மறந்துவிட்டு கதைக்கிறார்கள். ஆனால் அது தவறானது.
மேலும் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் என்ற வகையில், பலஸ்தீன தரப்புகளுடனும் நாம் தொடர்பில் இருக்கிறோம். கொழும்பில் அவர்கள் நடத்திய நக்பா தினத்தில் நான் வெளிநாட்டில் இருந்தமையால் பங்கேற்கவில்லை.
பலஸ்தீனுக்கு உள்ள உரிமைகள் தொடர்பிலும், அவர்கள் தனி நாடு என்பதிலும் நான் உறுதியாக இருக்கிறேன். அதுவே இலங்கையின் அணிசேரா கொள்கை எனவும் அலி சப்ரி ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் மேலும் குறிப்பிட்டார்.

இந்த வௌிநாட்டு அமைச்சர் சேற்றையும் மிதிப்பார், நீரைக்கண்டால் காலையும் கழுவுவார். இரண்டும் அவரைப் பொறுத்தவரை சரிதான். கோதாவின் தயவில் இனாமாக பாராளுமன்றம் நுழைந்த இவர் முதலில் அவருடைய இலவச சீட்டைக்காப்பாற்றிக் கொண்டு தான் அனைத்தையும் செய்வார். எனவே இந்த அமைச்சரின் நடத்தையை உலக அரங்கில் யாரும் பொருட்படுத்துவதில்லை. அடுத்த தேர்தலில் போட்டியிடமாட்டார், போட்டியிட்டால் இந்த சமூகம் அவருக்கு ஒருபோதும் வாக்களிப்பதில்லை என ஏற்கனவே தீர்மானித்துவிட்டது.
ReplyDelete