Header Ads



இளம் யுவதி தாயாரின் முன்னே, கழுத்தறுத்துப் படுகொலை


மொனராகலையில் வீட்டில் தாயாருடன் வசித்து வந்த இளம் யுவதி கத்தியால் கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


இந்த கொடூர சம்பவம் செவனகலை பிரதேசத்தில் நேற்று (09.06.2023) பட்டப்பகலில் இடம்பெற்றுள்ளது.


எஸ்.லக்சிகா என்ற 22 வயது யுவதியை இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பில் குறித்த யுவதியின் 22 வயதுடைய முன்னாள் காதலன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த இளைஞர் சம்பவம் இடம்பெற்ற பிரதேசத்திலிருந்து நேற்று மாலை பேருந்தில் தப்பிச் செல்ல முயற்சித்த வேளை பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். 


கொலை செய்யப்பட்ட யுவதியும், கைதான இளைஞரும் பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த போது காதலிக்க ஆரம்பித்தார்கள் எனவும், கடந்த வருடம் இளைஞருடனான காதலை யுவதி நிறுத்திக்கொண்டார் எனவும் தெரியவருகிறது. 


அதற்குப் பழிவாங்கும் வகையிலேயே யுவதியை இளைஞர் கழுத்தறுத்துப் படுகொலை செய்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


நேற்று மதியம் யுவதியின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற குறித்த இளைஞர், யுவதியின் தாயாரின் கண் முன்னால் இந்த கொலையை புரிந்துள்ளார் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


உயிரிழந்த யுவதியின் தந்தை கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னர் குழு மோதல் ஒன்றில் அடித்துப் படுகொலை செய்யப்பட்டார் என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.