Header Ads



ஆப்கானிஸ்தானின் பிரதமராக மௌலவி அப்துல் கபீர்


மௌலவி  அப்துல் கபீரை ஆப்கானிஸ்தானின் பிரதமராக தலிபான்கள் நியமித்திருக்கிறார்கள். 2020-ஆம் ஆண்டு தோஹா ஒப்பந்ததத்தில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்திய தலிபான்கள் குழுவில் முக்கியமாக பங்காற்றியவர் அப்துல் கபீர்.


அமெரிக்க தலையீட்டால் ஆப்கானிஸ்தானில் 2001-ஆம் ஆண்டு தலிபான்களின் ஆட்சி நீக்கப்பட்டது. அப்போது, அங்கு அதிகாரமிக்க பதவியில் கபீர் இருந்தார். கபீர் மீது ஐக்கிய நாடுகள் சபை பொருளாதாரத் தடைகள் விதித்தது. இதனால் கபீர் பாகிஸ்தானுக்கு தஞ்சம் புகுந்தார். இதன் தொடர்ச்சியாக, தலிபான்கள் கடந்த 2021 ஆகஸ்ட்டில் ஆட்சியை கைப்பற்றிய பிறகு முல்லா முகமது ஹசன்தான் ஆப்கானிஸ்தானில் ஆட்சி பொறுப்பில் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், கபீருக்கு பிரதமர் பதவியை தலிபான்கள் வழங்கி உள்ளனர்.


முல்லா முகமது ஹசன் உடல்நலக் குறைவால் சிகிச்சையில் இருப்பதனால் கபீர் தற்போது பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளையில் தலிபான்களுக்குள் அதிகாரப் போட்டி நிலவுவதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இதனை தலிபான்கள் மறுத்துள்ளனர். இது வழக்கமான மாற்றம்தான் என்றும் அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.


ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி என்று அவர்கள் அறிவித்தனர். எனினும், கடந்த முறையைப் போல் ஆட்சி இருக்காது என்றும், பெண் கல்வி; பெண் சுதந்திரம் பேணப்படும் என்றும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர். 

No comments

Powered by Blogger.