Header Adsஇலங்கைக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் 4,000 ஆண்டுகளாக உறவுகள் உள்ளனவா..?

 
- Naushad Mohideen -


நாலாயிரம் ஆண்டுகள் பழமையான இலங்கை - இஸ்ரேல் உறவை கட்டி எழுப்ப நட்புறவு சங்கம் தொடங்கப்பட்டுள்ளதாக இன்று -22- சற்று முன்னர் ஒரு இணையத்தள செய்தித் தலைப்பை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். 


1948ம் ஆண்டுக்கு முந்திய உலக வரைபடத்தைப் பார்த்தால் (எங்கு கிடைக்குமோ அங்கு போய் தேடிப் பாருங்கள். இன்றைய நவீன ஊடகங்களில் இது மறைக்கப்பட்ட ஒரு ஆவணம்) அங்கு இஸ்ரேல் என்ற ஒரு நாடே இருக்காது. உதுமானிய பேரரசின் கீழ் பலஸ்தீனம் என்ற ஒரு நாடு தான் இருந்தது. 


அது மட்டும் அல்ல அண்மையில் நகபா தினம் என்று ஒரு தினம் அனுஷ்டிக்கப்பட்டதாகவும், ஐக்கிய நாடுகள் சபை முதல் தடவையாக இவ்வாண்டு நகபா தினத்தை ஒரு சர்வதேச ஐ.நா தினமாக  அங்கீகரித்து பிரகடனம் செய்துள்ளதாகவும் கூட இணையங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. அப்படி என்றால் நகபா தினம் என்றால் என்னவென்றே தெரியாமல் தான் இவர்கள் செய்திகளையும் செய்தித் தலைப்புக்களையும் எழுதுகின்றார்களா???. 


அப்பாவி பலஸ்தீன மக்களை அவர்களது பூர்வீக பூமியில் இருந்து முடியுமானவரை பயங்கரவாதத்தை பிரயோகித்து விரட்டியடித்து விட்டு ஐ.நா தீர்மானம் ஒன்றின் மூலம் சட்டவிரோதமாக உருவாக்கப்பட்ட ஒரு குடியேற்ற நாடு தான் இஸ்ரேல். இஸ்ரேல் என்ற இந்த சட்டவிரோத குடியேற்ற நாட்டின் உத்தியோகப்பூர்வ வரலாறு ஆக 75 வருடங்கள் மட்டுமே. இதில் நாலாயிரம் ஆண்டு உறவுகள் எங்கிருந்து வந்தனவோ???? 


செய்தியை உள்ளே சென்று வாசித்த போது இந்த நட்புறவு சங்க கூட்டத்துக்கு இலங்கை ஆதிவாசிகளும் அழைக்கப்பட்டிருந்தனராம். இந்த வைபவத்தில் பேசிய ஒருவர்தான் நாலாயிரம் வருட கால உறவுகள் பற்றி பிரஸ்தாபித்துள்ளார். இது மோஸஸ் (நபி மூஸா) காலத்தில் இருந்து வரும் உறவுகள் என்றும் குறிப்பிட்டாராம். கதை எங்கே போகின்றது என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.


 பேசியவர் கேனத் தனமாக பேசினார் என்பதற்காக அதைக் கேட்டுக் கொண்டு இருந்து விட்டு அப்படியே எழுதியவருக்கு அறிவு எங்கே போனது???

 

அண்மைக்காலமாக இன முறுகல் நிலையை ஏற்படுத்த இலங்கையில் பயன்படுத்தப்பட்டு வரும் மூலோபாயங்கள், அதற்காக பயன்படுத்தப்பட்டு வரும் நபர்கள், இப்போது இலங்கை இஸ்ரேல் நட்புறவு சங்கம் எல்லாம் ஆழமாக சிந்திக்கப்பட வேண்டிய விடயங்கள். 


இதில் தற்போது களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர்களுக்கு மகத்தான பொறுப்பு உண்டு. பொதுவான உலக அறிவு, உலக வரலாறு, இன்றைய பூகோள அரசியல் நிலைமைகள் பற்றி தெளிவான விளக்கங்களும், அறிவும் ஊடகவியலாளர்களுக்கு அவசியமாகின்றன. 


இல்லையேல் அவர்களை மற்றவர்கள் குழப்பி தங்களது தேவைக்கு ஏற்ப பாவிப்பார்கள். அது மேசமான விளைவுகளையே ஏற்படுத்தும். தாங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்புவது ஊடகத் துறையில் மிகவும் ஆபத்தானது. அதனால் தான் ஊடகத்துறையின் அடிப்படை பற்றி போதிக்கின்ற போது If there is doubt leave it out என்ற தத்துவமும் சொல்லிக் கொடுக்கப்படுகின்றது. இது எத்தனை பேருக்கு தெரியுமோ? நான் அறியேன்.


No comments

Powered by Blogger.