Header Ads



சில பௌத்த மதகுருமார்கள் அப்பட்டமாக நடந்துகொள்கின்றனர்


நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை மாத்திரம் நம்பியிராமல், சரியான சீர்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் (28) உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,


"நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதைத் தவிர வேறு வழிகள் இருக்கவில்லை. எதிர்க்கட்சி எம்.பிக்களும் இந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டுதான் இங்கு உரையாற்றினர். ஆனாலும் தொடர்ந்தும் கையேந்துகின்ற நிலைக்கு எமது நாட்டை இட்டுச்செல்லாமல், சொந்த முயற்சியில் முன்னேறுவது குறித்து சிந்திப்பது அவசியம். எனவே, பொருளாதார மேம்பாடுகளுக்கென தங்களால் வழங்கப்படும் ஆலோசனைகளையும் அரசாங்கம் கருத்திலெடுப்பதே சிறந்தது.



1991 இல் இந்திய நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங் அறிமுகப்படுத்தியது போன்ற காணிச் சீர்திருத்தங்களை மேற்கொள்வது அவசியம். இறக்குமதிப் பொருட்களுக்குப் பதிலாக ஏற்றுமதிகளை அதிகரிப்பதுதான் இதற்குள்ள வழி. இதற்காக ஏற்றுமதியாளர்களை ஊக்குவிப்பது, சுற்றுலாத்துறையை முன்னேற்றுவது உள்ளிட்ட செயற்திட்டங்களே தேவைப்படுகின்றன. நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டல்கள் தேவை. அவர்களைக் கௌரவிக்கும் செயற்பாடுகளால்தான் சுற்றுலாத்துறையைக் கவர முடியும். மாறாக அவர்களை அச்சுறுத்துவது அல்லது அசிங்கப்படுத்துவதான செயற்பாடுகள், சர்வதேசத்தில் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.


வடக்கு, தெற்கை இணைக்கும் புத்தளம் - மன்னார் பாதையை திறக்குமாறு நாம் ஆலோசனை கூறினோம். இதுவும் கருத்தில் எடுக்கப்படவில்லை. ஏற்கனவே திறக்கப்பட்டிருந்த இப்பாதையை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே மூடினார். இப்பாதையூடாகப் பயணித்தால் நூறு கிலோமீற்றர் தூரத்தை மிச்சப்படுத்தலாம். நேரம், எரிபொருள் என்பவை இப்பயணத்தால் மீதமாகின்றன. இதனால், வடக்கு, தெற்கு வியாபாரப் பொருட்களுக்கான விலைகளையும் குறைக்க முடியும்.


இதுபோன்றுதான் தலைமன்னார், இராமேஸ்வரக் கப்பல் போக்குவரத்தும். இது, நாட்டின் வருமானத்திற்கு பெரும் பங்களிப்புச் செய்கிறது. அதிகளவான இந்திய சுற்றுலாப்பயணிகளை இந்தக் கப்பல் போக்குவரத்தால் உள்ளீர்க்க இயலும்.


நாட்டின்  பொருளாதரம் இந்தளவு அதலபாதாளத்திற்குச் சென்றுள்ள நிலையிலும், சில அமைச்சுக்களில் திருட்டுக்கள் ஒழிந்ததாக இல்லை. இது மட்டுமல்ல சில மதகுருமார்களின் செயற்பாடுகள், இலங்கையில் இன்னும் சமூக நல்லிணக்கம் ஏற்படவில்லை என்ற செய்திகளையே சொல்கின்றன.


புல்மோட்டை உள்ளிட்ட சிறுபான்மையினர் செறிவாக வாழும் பிரதேசங்களிலுள்ள காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகளையும், அங்குள்ள மக்களை அச்சுறுத்தும் பாணியிலும் சில பௌத்த மதகுருமார்கள் அப்பட்டமாக நடந்துகொள்கின்றனர். இப்பிரதேசங்களில் வாழும் ஓரிரு பெரும்பான்மைக் குடும்பங்களுக்காக, அப்பிரதேசத்தில் நீண்ட காலமாக வாழும் சிறுபான்மைச் சமூகங்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றன.


பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு பதிலாகக் கொண்டுவரப்படவுள்ள சட்டமும் இவ்வாறான அத்துமீறல்களில் ஈடுபடுவோரைப் பாதுகாக்கத்தான் கொண்டுவரப்படுகிறதோ? என்ற அச்சமும் மக்கள் மத்தியிலுள்ளது. எனவே, இந்நிலைமைகளை இல்லாமல் செய்து, இனவாத மற்றும் மத மேலாதிக்கப் போக்குகளை ஒழித்து, எல்லோரும் இலங்கையர் என்ற உணர்வில் ஒன்றுபட்டு உழைத்துத்தான் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும்" என்றார்.

No comments

Powered by Blogger.