Header Ads



இலங்கையின் வரலாறு குறித்து, ரணில் விடுத்துள்ள அறிவிப்பு


இலங்கையின் வரலாற்றை ஆய்வு செய்வதற்காக புதிய நிறுவனம் ஒன்று விரைவில் ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


தேசிய அருங்காட்சியகம், ஆவணக் காப்பகத் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், கலாசார முக்கோணம், பல்கலைக்கழகங்கள் மற்றும் றோயல் ஆசிய சங்கம் என்பனவற்றை இணைத்து நிறுவி, அதற்கான சட்ட வரைவை நிறைவு செய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.


மகாவலி கேந்திர நிலையத்தில் கடந்த (27) நடைபெற்ற றோயல் ஆசிய சங்கத்தின் 178 ஆவது கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.


றோயல் ஆசிய சங்கத்தின் சில வெளியீடுகளின் மூலப்பிரதிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கையளிக்கப்பட்டது.


அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,


முதலில், இந்த நிகழ்வுக்கு என்னை அழைத்ததற்கும், றோயல் ஆசிய சங்கத்தின் (RAS) நூல்களின் சில மூலப்பிரதிகளை எனக்கு வழங்கியதற்கும் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.


இந்தப் புத்தகங்களின் ஏராளமான மூலப் பிரதிகள் எனது தாய் சேர்த்து வைத்திருந்த புத்தகளிடையே  இருந்தன. அப்பிரதிகளை பல நிறுவனங்களுக்கு வழங்க எதிர்பார்த்திருந்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, போராட்டத்துடன் அந்த புத்தகங்களும் அழிக்கப்பட்டன. எனவே போராட்டம் தொடர்பில் இங்குள்ளவர்களுக்கு இருந்த அச்சத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.


இலங்கையில் உள்ள றோயல் ஆசிய சங்கம் மற்றும் கல்கத்தா கிளை ஆகியவை இந்த துணைக்கண்டத்தின் வரலாற்றை பதிவு செய்வதில் பெறுமதி மிக்க சேவையை ஆற்றியுள்ளன. பிரதம நீதியரசர் அலெக்சாண்டர் ஜோன்சன், ஜோர்ஜ் டர்னர் மற்றும் கல்கத்தாவில் மிகவும் பிரபலமான வின்சென்ட் போன்றோர் நமது வரலாற்றை மட்டுமல்ல, இந்தியாவின் வரலாற்றையும் ஆராய்வதில் மிகச் சிறந்த பணியைச் செய்தார்கள் என்று நினைக்கிறேன்.


நாம் பதிவு செய்துள்ள வரலாறு இந்தியாவிற்கு இல்லை. நமது மகாவம்சத்தைப் போலவே, அரசியல் விமர்சகர்களும் எழுதப்படாத வரலாற்றை ஆராய்ந்தே இந்திய வரலாற்றை விளக்குகிறார்கள். இருப்பினும், வரலாற்றுக்கு ஒரு பாரம்பரியம் உள்ளது. அந்த வரலாற்றை நாம் தொடர வேண்டும். இது எங்களுக்கு மிகவும் முக்கியமானது. மேலும், அந்த வரலாற்றைப் பாதுகாக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வரலாற்றை ஆராய்வதன் மூலம் வருங்கால வரலாற்றைப் பாதுகாக்கும் றோயல் ஆசிய சங்கத்தின் முயற்சிகள் பாராட்டப்பட வேண்டிய பணியாகும். றோயல் ஆசிய சங்கத்தின் சில சஞ்சிகைகளின் மூலப் பிரதிகளைப் படித்திருக்கிறேன்.


இலங்கையின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான ஜேம்ஸ் டி அல்விஸ் மற்றும் இராமநாதன் மற்றும் அருணாச்சலம் போன்ற சிறந்த மனிதர்களின் புகைப்படங்களும், ஏராளமாக இங்கு உள்ளன. இது உண்மையிலேயே மிகச்சிறப்பான செயல்.


எனவே நான் முதலில் செய்ய விரும்புவது வரலாற்றுக்கான ஒரு கல்வி நிறுவனத்தைத் தொடங்குவதுதான். எனது பதவிக்காலம் முடிவதற்குள் இது குறித்து கலந்துரையாடி முடிவு எடுக்க வேண்டும். அதற்காக பல்கலைக்கழகங்கள், தொல்பொருள் திணைக்களம் மற்றும் றோயல் ஆசிய சங்கம் ஆகியவற்றுடன் கலந்துரையாட வேண்டிய இறுதி வரைவை நாங்கள் தயாரித்து வருகிறோம். எதிர்காலத்தில் இந்தத் துறையின் பணிகளுக்கு நிதி மற்றும் அரசாங்க ஆதரவை நாங்கள் வரலாற்று நிறுவனம் மூலம் வழங்குவோம்.


முதலில் நூலகங்களின் நிலையை ஆராய்ந்து பாதுகாக்க வேண்டும். றோயல் ஆசிய சங்கத்தின் நூலகங்களையும் அவதானிக்க வேண்டும். அருங்காட்சியகம் மற்றும் தேசிய ஆவணக் காப்பகம் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். பொது நூலகத்தில் உள்ள ஆவணங்கள் பற்றி அறிந்து கொள்வது அவசியம். ஏனென்றால் எனது தாத்தா, பெர்கியுசனின் எழுத்துக்களின் தொகுப்பொன்றை பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு வழங்கினார்.


மேலும் ஒபேசேகரர்கள், பல்கலைக்கழகங்களுக்கு மற்றுமொரு தொகுப்பை வழங்கியுள்ளனர். இவை அனைத்தும் ஒன்றுசேர்க்க வேண்டும். மேலும், பல பல்கலைக்கழகங்களில் வெளியிடப்படாத ஆய்வறிக்கைகளை உள்ளன. அவை அனைத்தையும் நாம் சேர்க்க வேண்டும். இதுபோன்ற பல வரலாற்று நிகழ்ச்சிகளை நாங்கள் செய்யவேண்டியுள்ளன. இதற்கு முதலீட்டு திட்டங்கள் தேவை என்று நான் நினைக்கிறேன். பல்கலைக்கழகமாக இருந்தாலும் சரி, றோயல் ஆசிய சங்கமாக இருந்தாலும் சரி, எந்த திட்டத்தை முன்னெடுப்பது என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.


நாம் இன்னும் ஒரு பிரச்சினையை தீர்க்க வேண்டும். தொல்பொருளியல் பட்டப்பின்படிப்பு நிறுவனத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, நிதி வழங்குவது குறித்து சட்ட வரைவை தயாரிக்க வழங்கப்பட்டுள்ளது. இறுதி வரைவு கிடைத்த பின், சட்டரீதியாக அதனை கலந்துரையாடி, குழுவொன்றை நியமிப்போம். இந்தக் குழு மூலம் தொல்பொருளியல் பட்டப்பின்படிப்பு நிறுவனம் குறித்து முடிவுகளை எடுக்க முடியும். இந்த முடிவின் ஊடாக பலரை வரலாற்றை கற்க வைக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்.


தற்போது, பலர் வரலாறு கற்பதில்லை. இப்போது வரலாறு வேறுபட்டது. வெவ்வேறு பதிப்புகள் உள்ளன.  வரலாறு தமக்கான போக்கில் சென்றிருப்பது எல்லாவற்றையும் விட மோசமானது. எனவே நாம் அவர்களை மீண்டும் சரியான பாதையில் கொண்டு வந்து வரலாற்றுக்கு முன்னுரிமை  வழங்கி செயல்படுத்த வேண்டும்.


மேலும், இது தொடர்பாக நிறைய வேலைகள் செய்ய வேண்டியுள்ளன. உங்கள் நூலகத்தின் முக்கிய குறைபாடான குளிரூட்டியை சீர் செய்ய வேண்டியது அவசியம். அதற்கு தேவையான பணத்தை அரசாங்கம் வழங்கும். அதன் பிறகு, கடந்த ஆண்டுகளில் கொவிட் தொற்றுநோயால் நிறுத்தப்பட்ட கருத்தரங்குகளைத் தொடருங்கள். இது குறித்து உருவாக்கப்பட்டு வரும் புதிய கருத்தாடல்கள் மூலம் முதலீட்டு வாய்ப்புகளை வழங்க முடியும். எங்களாலும் அதற்கு உதவ முடியும்.


நூலகங்கள் என்று வரும்போது நிச்சயமாக புத்தகங்களைப் பாதுகாக்க பணம் வழங்கப்படும். அதன்பிறகு எங்கள் நிதியை வரலாற்று நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு பயன்படுத்துவோம். அது உங்கள் நிறுவனத்துடன் போட்டியிடும் ஒரு நிறுவனம் அல்ல. அந்த நிறுவனம் தேசிய அருங்காட்சியகம், தேசிய ஆவணக் காப்பகம், தொல்பொருள் திணைக்களம் மற்றும் கலாசார முக்கோணம், பல்கலைக்கழகங்கள் மற்றும் றோயல் ஆசிய சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படும்.


இந்த அனைத்து நிறுவனங்களையும் ஒன்றிணைக்கும் ஒரு மையத்தின் மூலம் நிறுவனங்களுக்கிடையேயான தொடர்பு மூலம் இந்த துறை தொடர்பான அறிவை மேலும் செழுமைப்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன்.


இலங்கையின் வரலாறு பற்றி மாத்திரமல்ல. கலாசாரத்திலும் கவனம் செலுத்த வேண்டும். வரலாறு மற்றும் கலாசாரத்தை எவ்வாறு ஆய்வு செய்வது? அந்த விடயங்களுடன் தொடர்புடைய கடந்த காலம் எங்குள்ளது என்பதை இங்கு கண்டறிய முடியும்.


இறுதியாக, இந்த துணைக்கண்டத்தின் வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட எந்தவொரு பிரச்சினையான தகவலையும் ஆராய்ந்து தீர்க்கும் ஆற்றலை இது ஏற்படுத்தும். மேலும், இந்த செயற்பாடுகளை மேலும் நடைமுறைப்படுத்துவதில் தடைகள் இருப்பின், பௌத்த விவகார அமைச்சு உங்களுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கும்.


Royal Asiatic Society இன் தலைவர் கலாநிதி மலனி டயஸ், முன்னாள் தலைவர் கட்டட வடிவமைப்பாளர் ஏஷ்லி டி டயஸ்  உள்ளிட்ட பலர்  இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


ஜனாதிபதி ஊடகப் பிரிவு

29-04-2023

No comments

Powered by Blogger.