Header Adsசரித்திர முக்கியத்துவமிக்க இஸ்லாமியக் கல்லூரிக்கு தீ வைத்த வெறியர்கள் (படங்கள்)


- அஜீஸ் லுத்ஃபுல்லாஹ் -


பீகாரில் வரலாற்றுப் புகழ்பெற்ற, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாலந்தா மாவட்டத்தில் பீகார் ஷெரிஃப் நகரத்தில் 350 ஆண்டுக் கால தொன்மையான அஜீஸியா மதரஸா என்கிற இஸ்லாமியக் கல்லூரியை இராம நவமி ஊர்வலத்தில் வந்த தீய சக்திகள் எரித்தழித்திருக்கின்றார்கள். இதே போன்று நாட்டின் பிற பகுதிகளிலும் வெவ்வேறு பள்ளிவாசல்களும் மதரசாக்களும் தீவைப்புக்கும் கல்வீச்சுக்கும் ஆளாகியிருக்கின்றன. 


இந்தக் கொடூரமான செயலைக் கண்டிக்கின்றோம். இது இந்திய நாட்டின் உயிரோட்டமாக இருக்கின்ற பன்முகத் தன்மைக்கும், மத நல்லிணக்கத்துக்கும் உலை வைக்கின்ற கேவலமான முயற்சி. நம்முடைய நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்துக்கும் மதச்சார்பின்மைக்கும் எதிரானதாகும். 


அற்ப அரசியல் ஆதாயங்களுக்காக, நாட்டைக் கொள்ளையடிப்பதற்காக, நாட்டு வளங்களை தனியாருக்குத் தாரை வார்ப்பதை தடையின்னிற செய்வதற்காக தீய சக்திகள் சலிக்காமல் மேற்கொண்டு வருகின்ற வெறுப்பு அரசியலின் உச்சம்தான் இந்தத் தீவைப்பு என்றால் அது மிகையல்ல. 


இந்தத் தீவைப்பு தொடர்பான படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி இருக்கின்றன. வேதனையைத் தருகின்ற படங்கள் அவை. குர்ஆனைக் கூட அந்த மாபாதகர்கள் எரித்திருக்கின்றார்கள். 


முஸ்லிம்களை இழிவுபடுத்தி கூப்பாடு போட்டுக்கொண்டு பள்ளிவாசலை எரித்த அந்த இளைஞர்களுக்கு, கும்பல் மனோபாவத்தில் குர்ஆனையே எரித்து அழித்திருக்கின்ற அந்த வெறிபிடித்த ஆசாமிகளுக்கு தாம் எதனை எரிக்கின்றோம் என்கிற உணர்வு இருந்ததா? குர்ஆனைக் குறித்தும் பள்ளிவாசலின் சிறப்பைக் குறித்தும் அவர்கள் அறிந்திருந்தார்களா?


குர்ஆன் முஸ்லிம்களின் குலச்சொத்தல்ல; அது உலக மக்கள் அனைவருக்கும் அருளப்பட்ட உலகப் பொதுமறை என்கிற உண்மை தெரிந்திருந்தால் அவர்கள் எரித்திருப்பார்களா?


குர்ஆன் மனிதனால் எழுதப்பட்ட நூல் அல்ல; அது நம் அனைவரையும் நாட்டு மக்களையும் உலக மாந்தர் அனைவரையும் பூமியையும் சந்திரனையும் சூரியனையும் பேரண்டம் முழுவதையும் படைத்த இறைவனால் அருளப்பட்டது என்பது தெரிந்திருந்தால் அவர்கள் அதனை எரித்திருப்பார்களா? 


மனித சமத்துவத்தை நிலைநாட்ட வந்த மகத்தான வேதம்தான் திருக்குர்ஆன்; உலக மக்கள் அனைவரும் ஒரே தாய் தந்தையரின் வழித்தோன்றல்களே! நாம் அனைவருமே இரத்தபந்தம் கொண்ட சகோதரர்களே! என சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் சமைக்க வந்த வேதம் தான் குர்ஆன் என்பது தெரிந்திருந்தால்  எந்தக் கைதான் அதனை எரிக்கத் துணிந்திருக்கும்? 


இன, குல, நிற, மொழி வேறுபாடுகள் அனைத்துமே அறிமுகத்திற்காக உருவாக்கப்பட்டவைதாமே தவிர பெருமை பாராட்டுவதற்காக அல்ல. இறையச்சமும் நன்னடத்தையும் கொண்டவர்தாம் உங்களில் சிறந்தவர் என சமூக அந்தஸ்துக்கு புது இலக்கணம் தந்து அனைத்துவிதமான ஏற்றத்தாழ்விலிருந்தும் விடுதலை பெற்றுக் கொடுத்த ஒப்பற்ற வேதம் தான் குர்ஆன் என்பது தெரிந்திருந்தால் அதனை எரிப்பதற்கு அவர்களுக்கு மனசு வந்திருக்குமா? 


தனிப்பட்ட வாழ்வுக்கு மட்டுமல்ல, கூட்டு வாழ்வுக்குத் தேவையான நெறிமுறைகளையும், அரசியல், சமூக, பொருளாதார ஒழுங்குமுறைகளையும் தரும் மகத்தான வழிகாட்டி நூல்தான் திருக்குர்ஆன் எனத் தெரிந்திருந்தால் எவர் தான் அதனை எரிக்க முயல்வார்கள்?


இன்றும் கூட தினம்தினம் எத்தனையெத்தனை இதயங்களை அது தன் பக்கம் ஈர்த்து வருகின்றது..! கடைந்தெடுத்த நாத்திகராக தமிழ்நாடு முழுக்க மும்முரமாக ஓங்கி குரல் கொடுத்து வந்த பெரியார்தாசன் அவர்களுக்கு நல்வழி காட்டியது அந்தத் திருக்குர்ஆன் தானே. இதழியலின் தந்தை எனப் போற்றப்பட்ட தினமணி நாளிதழின் ஆசிரியராக முத்திரை பதித்த ஏ. என். சிவராமன் அவர்களை தமது 97-ஆவது வயதிலும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டதும் அந்த இறைவேதம் தானே. 


பீகாரில் குர்ஆனை எரித்தவர்களுக்கு திருக்குர்ஆனின் செய்தியும் அது வழங்கும் வாழ்க்கை முறையும் அதன் புரட்சிகரமான அழைப்பும் தெரிந்திருக்கவில்லை. அவர்களைப் போன்றே இன்று நம்முடைய நாட்டு மக்களில் கோடிக்கணக்கானோருக்கு திருமறையின் செய்தி தெரியவில்லை. திருக்குர்ஆன் அவர்களுக்கும் சொந்தமானதுதானே. அவர்களுக்கு குர்ஆனின் செய்தி சென்று சேர வேண்டாமா? 


எல்லோருக்கும் குர்ஆனின் செய்தியை அறிமுகப்படுத்துவோம். 


அதே போன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் பள்ளிவாசல்களுக்கு முன்னால் ஆபாசமாக திட்டியும் கண்டபடி உளறியும் கூப்பாடு போட்ட மக்களுக்கும் பள்ளிவாசலின் சிறப்பு என்ன என்பது தெரிந்திருக்கவில்லை. 


பள்ளிவாசலில் வி.ஐ.பிக்களுக்கு தனி மரியாதை தரப்படுவதில்லை. ஏழையும் பெரும் பணக்காரர்களும் ஒரே வரிசையில் தோளோடு தோளாக நின்று தான் இறைவனை வழிபடுகின்றார்கள். பள்ளிவாசலில் உலக விவகாரங்கள் பேசப்படுவதில்லை. இறைவனின் புகழ் பாடப்படுகின்றது. பள்ளிவாசலில் உள்ளே நுழைவதற்கு கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. காணிக்கை அளிக்கத் தேவையில்லை போன்ற சிறப்புகள் எல்லாம் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. பள்ளிவாசலுக்குள் என்ன இருக்கின்றது என்பது கூட அவர்களுக்குத் தெரியவில்லை. 


எல்லோருக்கும் பள்ளிவாசலை அறிமுகப்படுத்துவோமே. விசிட் யுவர் மஸ்ஜித் என்கிற பெயரில் நிகழ்ச்சிகளை நடத்தலாமே. 


குர்ஆனின் செய்தியும் பள்ளிவாசலின் சிறப்பும் சென்று சேர்ந்துவிட்டால் நடப்பதே வேறு. 


அல்லாஹ் அருள் செய்வானாக. ஆமீன்.
No comments

Powered by Blogger.