Header Ads



உங்களிடம் உள்ள "பட்டம்" சட்டவிரோதமா..? பாயத் தயாராகிறது பாதுகாப்பு அமைச்சு

- றிப்தி அலி -

தேசமானி, தேசபந்து போன்ற தேசிய நன்மதிப்புப் பட்டங்களை ஜனாதிபதி அன்றி, வேறு தரப்புக்களினால் வழங்கப்படுவது சட்டவிரோதமாகும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. 


இந்த தேசிய நன்மதிப்புப் பட்டங்களை ஒத்த பெயரில் ஏனைய தரப்புக்களினால் வழங்கப்பட்டு வருகின்ற பட்டங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு  அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது. 


ஏனைய தரப்புக்களினால் வழங்கப்படுகின்ற போலியான தேசிய நன்மதிப்புப் பட்டங்களை தமது பெயர்களுக்கு முன்னாள் பயன்படுத்துவதும் சட்டவிரோதம் என ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டது. 


ஜனாதிபதியினால் மாத்திரம் வழங்க முடியுமான இந்த தேசிய நன்மதிப்புப் பட்டங்களை ஏனைய தரப்புக்களினால் வழங்குவதற்கான எந்தவொரு அனுமதியும் இதுவரை வழங்கப்படவில்லை என ஜனாதிபதி செயலகம் மேலும் தெரிவித்தது. 


தேசமானி, தேசபந்து உள்ளிட்ட தேசிய நன்மதிப்புப் பட்டங்களை ஒத்த பெயரிலான பட்டங்கள் தற்போது எமது நாட்டில்  எந்தவித அங்கீகாரமுமற்ற பல அமைப்புக்களினால் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன. இப்போலிப் பட்டங்களை வழங்குவதற்காக குறித்த அமைப்புக்களினால் பாரியளவிலான  நிதித்தொகையும் அறிவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 


இந்த தேசிய நன்மதிப்புப் பட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவலறியும் விண்ணப்பத்திற்கு, அதன் தகவல் அதிகாரியும் ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளருமான எஸ்.கே ஹேனதீரவினால்  வழங்கப்பட்ட பதிலிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 


நாட்டுக்கு பெறுமதியான சேவைகளை பாரியளவில் மேற்கொண்ட இலங்கைப் பிரஜைகளை கௌரவிக்கும் நோக்கிலேயே தேசிய நன்மதிப்புப் பட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 


இதற்கமைய, ஸ்ரீலங்காபிமானய, தேசமானி, தேசபந்து, ஸ்ரீலங்கா சிகாமணி, ஸ்ரீலங்கா திலகம், வீர சுடாமணி, வீர பிரதாப, வித்தியா ஜோதி, வித்தியா நிதி, கலா கீர்த்தி, கலா சூரி ஆகிய 11 தேசிய நன்மதிப்புப் பட்டங்கள் வழங்கப்படுகின்றன. 


இதற்கு மேலதிகமாக இலங்கைக்கு பாரியளவில் பெறுமதியான சேவைகளை வழங்கிய வெளிநாட்டவர்களை கௌரவிக்கும் நோக்கில் ஸ்ரீலங்கா ரத்ன, ஸ்ரீலங்கா ரஞ்சன மற்றும் ஸ்ரீலங்கா ரம்ய ஆகிய மூன்று தேசிய நன்மதிப்புப் பட்டங்களுக்கும் வழங்கப்படுகின்றன.


1986ஆம் ஆண்டின் தேசிய விருதுகள் சட்டத்தின் மூலமே இந்த தேசிய நன்மதிப்புப் பட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த அனைத்து தேசிய நன்மதிப்புப் பட்டங்களும் ஜனாதிபதியினால் மாத்திரமே வழங்க முடியும் என 387ஃ3ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாறாக, ஏனைய தரப்புக்களினால் இந்த தேசிய நன்மதிப்புப் பட்டங்களை வழங்குவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்படவில்லை என்கிறது ஜனாதிபதி செயலகம். 


கடந்த 1986ஆம் ஆண்டு முதல் இன்று வரை சுமார் 500 பேருக்கு மாத்திரமே இந்த தேசிய நன்மதிப்புப் பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இறுதியாக கடந்த பெப்ரவரி 3ஆம் திகதி முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு ஸ்ரீலங்காபிமானய எனும் அதியுயர் தேசிய நன்மதிப்புப் பட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கப்பட்டது. 


இலங்கை அரசாங்கத்தின் அதியுயர் விருதான இந்த ஸ்ரீலங்காபிமானய எனும் விருதினை ஒரு காலப் பகுதியில் ஐந்து பேர் மாத்திரம் வைத்துக்கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 


இந்த தேசிய நன்மதிப்புப் பட்டங்களுக்காக ஜனாதிபதியினால் தெரிவுசெய்யப்படுகின்றவர்களின் பெயர் விபரங்கள் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக வெளியிடப்பட வேண்டும். 


இதற்கமைய ஜனாதிபதி செயலகத்தினால் இந்த தேசிய நன்மதிப்புப் பட்டங்கள் தொடர்பில் இதுவரை 26 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.