Header Ads



சவூதி அரேபியா முதலிடம்


குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் வளர்ச்சிக்கான உத்தியோகபூர்வ உதவிகளை (மனிதாபிமான மற்றும் மேம்பாடு) வழங்கும் நாடுகள் பட்டியலில் சவூதி அரேபியா முதலிடத்தைப் பெற்றுள்ளதாக இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் ஹாலித் ஹமூத் அல் கஹ்தானி தெரிவித்துள்ளார்.


பிரான்ஸ் நாட்டின் பாரிஸை தளமாகக் கொண்ட பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பின் (OECD) வளரச்சிக்கான உதவிக்குழு இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது:


பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பின் (OECD) வளர்ச்சிக்கான உதவிக்குழு விடுத்துள்ள அறிக்கையில், 2021 ஆம் ஆண்டில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் வளர்ச்சிக்கான உத்தியோகபூர்வ உதவிகளை (மனிதாபிமான மற்றும் மேம்பாடு) வழங்கும் நாடுகளில் சவூதி அரேபியா 7.12 பில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கி முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.


இந்த உதவித்தொகையானது சவூதி அரேபியாவின் மொத்த தேசிய வருமானத்தில் 1.05% ஆகும். மேலும் இத்தொகை, உதவி வழங்கும் நாடுகள் தங்களது மொத்த தேசிய வருமானத்தில் 0.7% என்ற தொகையை மேற்குறிப்பிட்ட நாடுகளின் வளர்ச்சிக்காக உத்தியோகபூர்வ உதவியாக ஒதுக்க வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விடவும் அதிகமாகும்.


இரு புனிதத்தலங்களின் பாதுகாவலர், மன்னர் சல்மான் பின் அப்துல் அசிஸ் அல்சவூத் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதமருமாகிய இளவரசர் முஹம்மது பின் சல்மான் பின் அப்துல் அசிஸ், ஆகியோரின் வழிகாட்டல்கள், அனைத்து தகுதியுடனும் உரிமையுடனும் சர்வதேச மனிதாபிமான நடவடிக்கைகளில் சவூதி அரேபியாவை முன்னணியில் வைத்திருக்கும் இம்மாபெரும் சாதனைக்கு பங்களிப்புச் செய்துள்ளது.


அவ்வாறே சவூதி அரேபியா அதன் வரலாறு முழுவதும் கஷ்டத்தில் வாடுபவர்களுக்கு உதவுவதற்கும், அவ்வாறானவர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் நன்னோக்குடன் உதவிக்கரம் நீட்டும் ஒரு கருணையுள்ள நாடாக தொடர்ந்தும் செயற்பட்டு வருகிறது. மேலும் புத்திசாதுர்யமும் தூரநோக்கும் கொண்ட அந்நாட்டின் தலைமைகள், தாராள மனப்பான்மை கொண்ட அந்நாட்டு மக்களின் நிலையான உயர்பெறுமானங்களைப் பிரதிபலிக்கும் அதே உன்னத அணுகுமுறையில் இந்நடவடிக்கைகள் மேலும் தொடர்கிறது. மேலும் விதிவிலக்கான மற்றும் தொடர்ச்சியான சாதனைகள் சவூதி அரேபியாவின் 'விஷன் 2030' எனப்படும் மூலோபாய நோக்கின் விளைவாகவே கருதப்படுகிறது.


பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (OECD), 2021 ஆம் ஆண்டுக்கான தரவுகளின்படி, மேற்படி குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் மனிதாபிமான நடவடிக்கைகள், உணவுப் பாதுகாப்பு, தங்குமிடம், கல்வி, நீர், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் போன்ற மிக முக்கிய துறைகளுக்கு சவூதி அரேபியாவின் இவ்வுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.