Header Ads



பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தினால் இலங்கை மாணவர்களுக்கு ஜின்னா புலமைப்பரிசில் வழங்கி வைப்பு


பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தால்,  சிறப்புத்தேர்ச்சி பெற்ற இலங்கை உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் வைபவம், 16 ஓகஸ்ட் 2022 அன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH)  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஓகஸ்ட் 14 ம் தினம் கொண்டாடப்பட்ட பாகிஸ்தானின் 75 வது சுதந்திர தினத்தின் தொடர்ச்சியாக இந்த விழா நடைபெற்றது. 2006 ஆம் ஆண்டு முதல் உயர்தர மற்றும் சாதாரண தர இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தான் அரசாங்கத்தினால் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், இதுவரை சுமார் 2300 இலங்கை மாணவர்கள் இந்த ஜின்னா புலமைப்பரிசில் புலமைப்பரிசில்  திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்  மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) உமர் பாரூக் பர்கி அவர்கள்  விழாவிற்கு வருகை  தந்தோரை வரவேற்றார். சிறந்த கல்வி வாய்ப்புகளுடன் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதில் இலங்கையின் பெருமைமிக்க பங்காளியாக பாகிஸ்தான் திகழ்வதாகவும், மருத்துவம், பல் மருத்துவம், மருந்தியல்  மற்றும் பொறியியல் ஆகிய துறைகளில் பாகிஸ்தான் தொழில்நுட்ப உதவித் திட்டம் (PTAP) மற்றும் அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் உட்பட பல்வேறு புலமைப்பரிசில் திட்டங்களின் கீழ் பாகிஸ்தான் அரசாங்கம் 1976 ஆம் ஆண்டு முதல் இலங்கை மாணவர்களுக்கு உயர்கல்வி புலமைப்பரிசில்களை வழங்கி வருவதாகவும்  அவர் தனது வரவேற்பு உரையில் குறிப்பிட்டார். 



தனது உரையின் இறுதியில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்,  இவ்வைபவத்திற்கு வருகை தந்து சிறப்பித்த கௌரவ விருந்தினர்களுக்கு தமது நன்றியினை  தெரிவித்ததோடு, இரு நாடுகளினதும்  இருதரப்பு உறவின் முக்கியத்துவத்தையும், வலுவான இந்த உறவினை மென்மேலும் வலுப்படுத்துவதை பாகிஸ்தான் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.


இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். அவர் தனது உரையில், பாகிஸ்தான் அரசாங்கத்தின் இப்புலமை பரிசில் திட்டத்தை பாராட்டியதோடு  ஜின்னா புலமைப்பரிசில் திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களையும் பாராட்டினார்.


மேலும் அவரது உரையில், பாகிஸ்தான் நாட்டின்  உருவாக்கத்திற்கு  காரணமான பாகிஸ்தானின் தேசிய தந்தை , குவாய்த் -இ-ஆசாம், முஹம்மது அலி ஜின்னாவுக்கு  தமது மரியாதையை செலுத்தியதோடு, இந்த புலமைப்பரிசில்கள் இலங்கை மாணவர்களுக்கு எவ்வித பாரபட்சமின்றி வழங்கப்படுவது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும் எனவும்  குறிப்பிட்டார். 


இறுதியாக தனது உரையில், வலுவான பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவுகளை நினைவுகூர்ந்த அவர், 2006 ஆம் ஆண்டு முதல் பல இலங்கை மாணவர்களுக்குப் பயனளித்து வரும்  ஜின்னா புலமைப்பரிசில் திட்டத்தைப் பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.




1 comment:

  1. We express our whole hearted thanks and appreciations for the Govt. of Pakistan and the High commission of Pakistan in Colombo for its great help for our children to learn and excel in higher education. We take this opportunity to pray for Pakistan and its Hon. High Commissioner for his personal interect for the great contribution for the higher education of Sri Lankan children.

    ReplyDelete

Powered by Blogger.