Header Ads



2025 வரை ஆட்சி தொடர ஒத்துழைப்பு வழங்க முடியாது, ரணில் எந்த வேலைத்திட்டத்தையும் முன்வைக்கவில்லை


சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டுமெனில் எம்மால் முன்வைக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அத்தோடு சர்வகட்சி அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படவுள்ள பொது வேலைத்திட்டம் , அதன் கால வரையறை மற்றும் அடுத்த தேர்தலுக்கான தினம் என்பவற்றையும் அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.


கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,


எம்மால் முன்வைக்கப்பட்ட வேலைத்திட்டங்களை விட மாற்று திட்டங்கள் காணப்படுமாயின் அவற்றை முன்வைக்குமாறு அனைவரையும் வலியுறுத்துகின்றோம். சர்வதேச நாணய நிதியத்திடம் கடனைப் பெற்றுக் கொள்ளக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். அவ்வாறெனில் அதற்கு பதிலாக அவர்கள் முன்வைக்கும் மாற்றுத்திட்டம் என்ன?


கடந்த காலங்களில் தவறான கொள்கைகளைப் பின்பற்றியமையின் காரணமாகவே நாடு இன்று வங்குரோத்து நிலைமையை அடைந்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கேற்ப நாட்டை நிர்வகிக்க வேண்டும் என்று நாம் கூறவில்லை. மாறாக இந்த பேச்சுவார்த்தைகளின் போது பொருளாதார மறுசீரமைப்புக்களுக்கு தாம் தயார் என்பதை அரசாங்கம் நிரூபிக்க வேண்டும். அதற்கான முறையான வேலைத்திட்டத்தை முன்வைக்க வேண்டும். அதே வேளை கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஏனைய தரப்பினருடன் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உறுதிப்படுத்தல் அத்தியாவசியமாகிறது.


தற்போது சர்வதேச நாணய நிதியமும் எம்மீது நம்பிக்கை இழந்துள்ளது. காரணம் ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் அதன் தரப்படுத்தலில் இலங்கையை மேலும் கீழ் நிலையில் தரப்படுத்தியுள்ளது. பொருளாதாரத்தை மறுசீரமைக்காமல் இந்த தரப்படுத்தல்களில் முன்னேற முடியாது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இன்னும் எந்தவொரு வேலைத்திட்டத்தையும் முன்வைக்கவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே பொருளாதார மறுசீரமைப்பிற்கான வேலைத்திட்டங்களை முன்வைத்துள்ளது.


ஏனைய தரப்பினரிடம் இதுபோன்ற மாற்று திட்டங்கள் இருந்தால் முன்வைக்குமாறு வலியுறுத்துகின்றோம். அவ்வாறு முன்வைக்கப்படும் திட்டங்கள் சிறந்தவையாகக் காணப்பட்டால் , கட்சி பேதமின்றி அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு நாம் தயாராகவுள்ளோம். சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டுமெனில் எம்மால் முன்வைக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.


அது மாத்திரமின்றி சர்வகட்சி அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படவுள்ள பொது வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்வைக்க வேண்டும். மேலும் இடைக்கால அரசாங்கத்திற்கான கால வரையறை மற்றும் அடுத்த தேர்தலுக்கான தினம் என்பவற்றையும் அறிவிக்க வேண்டும். அதனை விடுத்து 2025 வரை இந்த ஆட்சியே தொடரும் என்றால் , அதற்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார். TL

No comments

Powered by Blogger.