Header Ads



தப்பிச் செல்ல கோட்டாபய, மாலத்தீவை தேர்ந்தெடுத்தது ஏன்..?


இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதன் அதிகாலை மாலத்தீவுக்கு தப்பிச் சென்றுள்ளார். அவர் தப்பிச் செல்ல மாலத்தீவை தேர்ந்தெடுத்தது ஏன்?

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் மூன்று மாத காலமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம் போராட்டம் மீண்டும் தீவிரம் அடைந்தது. ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தனர்.

அதன்பின் ஜனாதிபதி எங்கிருக்கிறார் என கேள்விகள் எழுந்த நிலையில் அவர் இன்று அதிகாலை மாலத்தீவுக்கு தப்பிச் சென்றதாக சொல்லப்பட்டது

தனது மனைவி மற்றும் இரு பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவர் அங்கு சென்றுள்ளார்.

இந்திய பெருங்கடல் தீவான மாலத்தீவு இலங்கையின் அண்டை நாடு. இருநாடுகளும் நல்ல உறவை பேணி வருகின்றன. மேலும் இலங்கையிலிருந்து மாலத்தீவிற்கு 90 நிமிடங்களில் விமானம் மூலம் சென்று விடலாம்.

இரு நாடுகளும் பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு நேர்மறையான ராஜிய மற்றும் பொருளாதார உறவுகளை பேணி வருகின்றன. மாலத்தீவின் ராணுவத்திற்கு இலங்கை ராணுவம் பயிற்சிகளை வழங்கும்.

குறிப்பாக ராஜபக்ஷ குடும்பத்தினர் மாலத்தீவுடன் வலுவான உறவைக் கொண்டுள்ளனர். ராஜபக்ஷ குடும்பத்தினர் மாலத்தீவின் முன்னாள் அதிபர் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது நஷீத்திடம் நட்புறவை கொண்டுள்ளனர்.

மாலத்தீவின் தலைநகரம் மாலே விமான நிலையத்தில் ராஜபக்ஷ குடும்பத்தினரை வரவேற்க நஷீத் காத்திருந்ததாக சில உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல ராஜபக்ஷ குடும்பத்திற்கு அங்கு வீடுகளும் உள்ளன. மேலும் சில சொத்துக்களும் அங்குள்ளன.

உள்ளூர் நேரப்படி புதன் அதிகாலை சுமார் 03:00 மணிக்கு ஜனாதிபதியின் விமானம், மாலத்தீவின் தலைநகர் மாலேவில் தரையிறங்கியதாக பிபிசிக்கு தெரியவந்துள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தை மக்கள் முற்றுகையிட்ட பிறகு அவர் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் இருந்தது..

அவரது சகோதரரும், முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ஷவும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்திருக்கிறது.

கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிய செய்தி வெளியானதும், காலி முகத்திடலில் போராட்டம் நடத்தி வரும் போராட்டக்காரர்கள் கொண்டாட்டத்தைத் தொடங்கினர்.

மக்களின் எதிர்ப்புக்கு இடையே இன்று பதவி விலகுவதாக கோட்டாப ராஜபக்ஷ அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிபராக இருக்கும்வரை கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய முடியாது. அதனால் பதவியில் இருக்கும்போதே அவர் வெளிநாட்டுக்குச் சென்றுவிட விரும்பியதாக நம்பப்படுகிறது.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலத்தீவுக்கு தப்பிச் சென்றுள்ள நிலையில் அதை எதிர்த்து அங்குள்ள இலங்கை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோட்டாபய ராஜபக்ஷவை அங்கு தங்க அனுமதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் கொடிகளையும் பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

இருப்பினும் ராஜபக்ஷவின் வருகை குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் ஏதும் தெரிவிக்கவில்லை என மாலத்தீவின் செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

மேலும் ராஜபக்ஷ மாலத்தீவில் தொடர்ந்து தங்க மாட்டார் என்றும், அவர் அடுத்தபடியாக வேறு ஒரு நாட்டிற்கு பயணம் செய்வார் என்றும் செய்தி வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்தன. bbc

No comments

Powered by Blogger.