Header Ads



வீடுகளை இழந்த எம்.பிகளுக்கு முன்னுரிமை வழங்காமல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்குங்கள்


எம்.பிகளின் வீடுகளை தாக்கி அழித்த அனைவரையும் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும் தனது கட்சி ஆதரவாளர்கள் இதனுடன் தொடர்புபட்டிருந்தால் தமது கட்சி உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வீடுகளை இழந்த எம்.பிகளுக்கு வீடுகள் வழங்குவதற்கு முன்னுரிமை வழங்காமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர்,

பிரதமர் பதவி விலகுவதை முன்னிட்டு நடந்த கூட்டத்தின் பின்னர் தான் வன்முறை வெடித்தது. எம்.பி ஒருவர் கொல்லப்பட்டார். 30 நாட்களுக்கு மேல் அமைதியாக நடந்த ஆர்ப்பாட்டத்தின் மீதான தாக்குதலின் பின்னரே வன்முறை வெடித்தது. 9 ஆம் திகதி நடைபெற்ற அசம்பாவிதங்களுடன் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

எம்.பிகளுக்கு வீடுகள் வழங்க முன்னுரிமை வழங்குவதாக வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியிருந்தார். ஆனால் கேஸ் வெடிப்பு, வயல் நிலங்கள் சேதம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவே அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

வீடுகள் அழிக்கப்பட்டதற்கு எதிராக சர்வதேச பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என பந்துல குணவர்தன கோரினார். மனித உரிமை ஆணைக்குழுவுக்கு செல்ல வேண்டும் என்றார். ஆனால் தமிழ் ஊடகவியலாளர்கள் காணமல் போனதற்கு எதிராகவும் லசந்த கொல்லப்பட்டதற்கு எதிராகவும் அங்கு சென்றவர்களை தேசத்துரோகிகள் என்றார்கள்.

காலிமுகத்திடலிலும் அலரிமாளிகைக்கு அருகிலும் நடந்த தாக்குதலின் பின்னரே வன்முறை வெடித்தது. அந்த தாக்குதலுக்காக மாலை நடந்து தாக்குதலை நியாயப்படுத்த முடியாது.

எமது கட்சியினர் தாக்குதல்களில் தொடர்புபட்டிருக்கவில்லை. அவ்வாறு யாராவது தொடர்பட்டிருந்தால் அவர்களுக்கு கட்சி அடிப்படையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்போம். எமது கட்சி வன்முறைகளுடன் தொடர்புபட்ட கட்சி அல்ல என்றார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்,ஷம்ஸ் பாஹிம்)

No comments

Powered by Blogger.