ஹஜ்ஜுல் அக்பரின் விடுதலை தொடர்பில் விரைவில் சாதகமான பதில் - முஸ்லிம் குழு பேச்சு
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலையடுத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம்களை விடுவிப்பது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா தலைமையில் முஸ்லிம் இயக்கங்களின் தூதுக்குழு ஒன்று உயர் பொலிஸ் அதிகாரிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது.
புதனன்று பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களது விசாரணையைத் துரிதப்படுத்தி விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தூதுக்குழுவினர் வேண்டுகோள் விடுத்தனர்.
இதேநேரம் தவறாக வழிநடத்தப்பட்ட இளைஞர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் அமைப்புக்கள் தேவையான உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் தூதுக்குழுவினர் தெரிவித்தனர்.
ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் ஹஜ்ஜுல் அக்பரின் கைது தொடர்பாகவும் தூதுக்குழுவினர் உயரதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர். தீவிரவாதச் செயற்பாடுகளை கடுமையாக எதிர்த்து செயற்பட்ட ஒருவரைக் கைது செய்திருப்பது குறித்து முஸ்லிம் சமூகம் கவலை கொண்டுள்ளதாகவும் தூதுக்குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அவர் தொடர்பாக மிக விரைவில் சாதகமான பதில் ஒன்று கிடைக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தக்குழுவில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா, தேசிய சூறா சபை, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை, அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம், ஸ்ரீலங்கா ஜமாஅத்தே இஸ்லாமி, ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், இலங்கை மலாயர் சங்கம், கொழும்பு பெரிய பள்ளிவாசல் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
பொலிஸ் திணைக்களத்தின் சார்பில் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் காமினி செனவிரத்ன மற்றும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் ஜயசிங்க ஆகியோர் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

Well done for all this innitives...
ReplyDeleteLet us hope peace prevails in Sri Lanka