பண்டாரநாயக்கவின் ஞாபகார்த்த நிகழ்வு, சந்திரிக்கா - மைத்திரி பங்கேற்பு
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகரான முன்னாள் பிரதமர் அமரர் எஸ்.டப்ளியு.ஆர்.டி.பண்டாரநாயக்க 60வது ஞாபகார்த்த நிகழ்வு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (26) முற்பகல் ஹொரகொல்ல பண்டாரநாயக்கவின் சமாதி முன்னால் இடம்பெற்றது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் சுனேத்திரா பண்டாரநாயக்க ஆகியோர் முதலில் சமாதிக்கு அஞ்சலி செலுத்தியதுடன், தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள் சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தினார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர் மங்கள சமரவீர, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, துமிந்த திசாநாயக்க, ஏ.எச்.எம்.பௌசி, லசந்த அழகியவன்ன, சரத் ஏக்கநாயக்க ஆகியோர் உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
சர்வ மத அனுஷ்டானங்களுடன் இன்று முற்பகல் அஞ்சலி நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டதுடன், அத்தனகல்ல ரஜமகா விகாரையின் விகாராதிபதி பன்னில ஸ்ரீ ஆனந்த தேரர் ஆசியுரை ஆற்றினார்.


Post a Comment