Header Ads



இன்றும் பல்டிகள் நடக்குமா..? ஜனாதிபதி கூறிய ரகசியம் என்ன..?? பரபரப்பாகும் இலங்கை

-DC-

பாராளுமன்றம் மீண்டும் இன்று(16) பிற்பகல் 1.30 மணிக்கு கூடவுள்ளது. இன்றைய சபை அமர்வில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வாக்கெடுப்பை நடாத்துமாறு ஜனாதிபதி நேற்றிரவு தற்போதைய எதிர்த் தரப்பினரைக் கோரியுள்ளார்.

பாராளுமன்ற கலைப்புக்கு எதிராக நீதிமன்றம் சென்ற பாராளுமன்றத்திலுள்ள சகல கட்சி பிரதிநிதிகளையும் நேற்றிரவு (15) ஜனாதிபதி சந்தித்துள்ளார்.

இதன்போது, இணக்கம் காணப்பட்ட விடயங்கள் இரண்டு இருப்பதாகவும், அதில் ஒன்று பாராளுமன்றத்தில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்கும் குழுவுக்கு அரசாங்கத்தை ஒப்படைக்க தயாராகவுள்ளதாகவும், மற்றது என்னவென்பது இரகசியமாகும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்கவும், மனோ கணேசனும் தெரிவித்திருந்தனர்.

ஊடகங்களிடம் தெரிவிக்க முடியாத இரகசியம் என்னவென்பது எல்லோரிடத்திலும் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய சபை அமர்வும் அமளி துமளியுடன் ஒத்திவைக்கப்பட்டால், பொது மக்கள் சபையின் மீதுள்ள குறைந்த பட்ச நம்பிக்கையையும் இழந்து விடுவார்கள் என்பது மட்டும் நிச்சயமானது என்பதை சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் கருத்துப் பரிமாற்றங்கள் புடம்போட்டுக் காட்டுகின்றன.

இன்றும் கட்சித் தாவல்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. பலர் இந்த அரசாங்கத்துக்கு எதிராக தம்முடன் இணைந்துகொள்ள வரவிருப்பதாக ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்கள் நேற்றும் கூறியிருந்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தரப்பினுடைய இன்றைய நடவடிக்கை எவ்வாறானது என்பது இதுவரையில் வெளியாகவில்லை. கடும்போக்கு அமைப்பு பிக்குகளும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் முன்வைத்த காலை பின் வைக்கமாட்டோம் என்ற நிலைப்பாட்டில் இருப்பதை பல இடங்களிலும் கூறிவருகின்றனர்.

சபையில் இன்று வாக்கெடுப்பை நடாத்த இடமளித்தால், மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவிக்கு என்ன நடக்கப் போகின்றது என்பது புதிராகவே உள்ளது. இந்நிலையில் இன்று பாராளுமன்றம் கூடுவதானது நாட்டு மக்கள் பலரதும் கவனத்தை ஈர்த்த ஒரு விடயமாகும். 

No comments

Powered by Blogger.