Header Ads



"ஊனமுற்றவரை வெளியேற்றி, குருடரை பதவியில் அமர்த்த முடியாது"

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பின்னர் என்ன நடக்கும் என்பது பற்றி யாருக்கும் தெரியாது என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்...

நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அல்லது தோற்கடிக்கப்பட்டால் அதன் பின்னரான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இரண்டு தரப்பினரும் எதனையும் திடமாக அறிவிக்கவில்லை.

நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் எடுக்கும் போது மக்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதேபோன்று நாட்டின் பாதுகாப்பினையும் கருத்திற் கொள்ள வேண்டும்.

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றினால் அவருக்கு பதிலாக யாரைக் கொண்டு வருவது என நாம் கேள்வி எழுப்பினோம்.

ஊனமுற்ற ஒருவரை வெளியேற்றி குருடர் ஒருவரை பதவியில் அமர்த்த முடியாது. பதவியில் அமர்த்தப்படுபவர் பச்சை, நீலம் அல்லது சிவப்பு என்பதில் பயனில்லை.நாடு அடைந்துள்ள பின்னடைவிலிருந்து நாட்டை மீட்கக் கூடிய ஒருவரே பதவியில் அமர்த்தப்பட வேண்டும்.

நாடு இன்று அதள பாதாளத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளது, விவசாயம், பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. முதலீடுகள் கிடைப்பதில்லை. சட்டம் ஒழுங்கு பற்றிய நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளது.

இதிலிருந்து நாட்டை மீளக்கட்டியெழுப்ப முடியும், கொள்கைகளை அமுல்படுத்தக்கூடிய ஆளுமையுடைய ஒருவரை பிரதமராக நியமிக்க வேண்டும்.

மேலும் சர்வதேச ரீதியில் எமக்கு பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன, அவற்றினை எதிர்நோக்கக்கூடிய வகையிலான நபர்களை பதவியில் அமர்த்த வேண்டும்.

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கத் தீர்மானித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி, நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி அறிவிக்க வேண்டும்.

இந்த இரண்டு தரப்பினரும் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதில்லை. எனவே எதிர்வரும் நாட்களில் இந்த விடயத்தை பற்றி அறிவிக்க வேண்டியது அவசியமானது.

நாட்டு மக்களுக்கு இன்று கட்சி, நிறம், நபர்கள் முக்கியமில்லை. கொள்கைகளே முக்கியத்துவப்படுகின்றது.

எதிர்வரும் நாட்களில் இடம்பெறும் நிகழ்வுகளை உன்னிப்பாக அவதானித்து தீர்மானம் எடுப்பேன் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. இனவாதமும், இனவாதக் கட்சிகளின் இணைவுகளும் ஊழலும் இல்லாத தூய ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ், முஸ்லிம்  கட்சிகளும் இணைந்த ஓர் கூட்டணியை ஒன்றிணைக்க முடியுமாக இருந்தால் அதுவே இந்நாட்டின் விடிவுக்கான வழியாக இருக்கும்.

    ReplyDelete
  2. Mm.. so he will stay away from voting it seems.

    ReplyDelete

Powered by Blogger.