கொழும்புக்கு அப்பால், பற்றியெரியும் கப்பல் – இந்திய, சிறிலங்கா படைகள் போராட்டம் (படங்கள்)
கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் பற்றியெரிந்து கொண்டிருக்கும் எம்.வி. டானியேலா என்ற கொள்கலன் கப்பலில் தீணை அணைப்பதற்கு சிறிலங்கா, இந்தியா கடற்படைகள் மற்றும் இந்திய கடலோரக் காவல்படை, சிறிலங்கா விமானப்படை என்பன கூட்டாக பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
பனாமா கொடியுடன் சென்று கொண்டிருந்த எம்.வி. டானியேலா என்ற கொள்கலன் கப்பலில் தீப்பற்றியிருப்பதாக நேற்று மாலை சிறிலங்கா கடற்படையிடம் உள்ளூர் முகவரால் அவசர உதவிக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக, சிறிலங்கா கடற்படையின் பி-412, பி-436 ஆகிய அதிவேக தாக்குதல் படகுகள் விரைந்து சென்று கப்பலில் இருந்த 21 மாலுமிகளையும் மீட்டதுடன், தீணை அணைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டன.
மேலதிகமாக, சிறிலங்காவில் ஆய்வுப் பயணமாக வ்ந்திருந்த ஐஎன்எஸ் தர்ஷக் மற்றும் ஐஎன்எஸ் காரியல் ஆகிய கப்பல்களையும் இந்தியக் கடற்படை தீயணைப்பு நடவடிக்கைக்காக அனுப்பியுள்ளது.
இவற்றுடன் சிறிலங்கா விமானப்படையின் பெல்-212 உலங்குவானூர்தி ஒன்றும், நீரைத் தெளிக்கும் வசதிகளைக் கொண்ட இராட்சத தொட்டியுடன் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அதேவேளை இந்திய கடலோரக்காவல்படை, செடெக் ரக உலங்கு வானூர்தி ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளது.


Post a Comment