Header Ads



இலங்கைக்கு விரைவில் புதிய குடிவரவு, குடியகல்வு சட்டம்

சர்வதேச சூழல் மற்றும் இலங்கையின் முன்னுரிமைகள் அடிப்படையில் அதற்கமைவாக புதிய குடிவரவு   குடியகல்வு சட்டமூலங்களை அரசாங்கம் தயாரித்து வருகின்றது. 

இதுவரை 1948 இன் குடிவரவு  குடியகல்வு சட்டமூலம் இலக்கம் 20 கடந்தகால காலனித்துவ சகாப்தத்தை பிரதிபலிக்கின்றது. காலனித்துவ ஆட்சியே குடிவரவு  குடியகல்வு விடயங்களுக்கான அத்திவாரமாக அமைந்தது.

அதேவேளை இலங்கையர்கள் நாட்டைவிட்டு பயணம் மேற்கொள்கின்றமை மற்றும் கடவுச்சீட்டு விநியோக செயற்பாடுகள் என்பனவற்றையும் இந்த சட்டமூலம் கையாள்கின்றது.

சர்வதேச நடமாட்டங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையிலும் பெரும்பான்மையான போக்குவரத்துகள் கடல் மார்க்கமாக இருந்த காலத்திலும் தற்போதைய சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதில்  குடிவரவு  குடியகல்வு முக்கியமான  வகிபாகத்தை கொண்டிருக்கிறது.

தற்காலிகமாக தொழிலாளர்கள் புலம்பெயர்தல், வெளிநாட்டு முதலீடு, எல்லை கடந்த வர்த்தகம், சுற்றுலா, கல்வி வாய்ப்புகள் என்பவை பொருளாதாரத்திற்கு பெறுமதியான பங்களிப்பை வழங்குகின்றன. தாராளமயப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தின் மேலெழுகையின் விளைவாகவும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட சந்தைக் கட்டமைப்புகளினாலும் பொருளாதாரத்திற்கு காத்திரமான பங்களிப்புகள் வழங்கப்படுகின்றன. 

குடிவரவு  குடியகல்வு திணைக்களத்தினால் அண்மையில் அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டது. தற்போதைய குடிவரவு நடைமுறைகளில் குறிப்பிடத்தக்க மீளாய்வு தேவைப்படுவதாகவும் இவை தொடர்பான சட்டமூலமும் மீளாய்வு செய்யப்படவேண்டியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குடிவரவு எமது தேசிய அடையாளம், தேசிய பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, ஒழுங்கீனமான  புலம்பெயர்வு போன்ற விவகாரங்கள் தொடர்பாக கேள்விகளுக்கு பதில்களையும் அந்த அறிக்கை கொண்டிருந்தது. 

அத்துடன் ஆட்கடத்தல், சுகாதாரம், பயங்கரவாதம், எல்லை கடந்த குற்றச்செயல்கள், சர்வதேச அரங்கில் எமது வகிபாகம் தொடர்பான விடயங்களும் அந்த அறிக்கையில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தன.

குடியகல்விற்கு மதிப்பளிக்கும் அதேவேளை உலகமயமாக்கம், பொதுமக்கள் சுற்றுலா, துரித பொருளாதார வளர்ச்சி, வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவித்தல், இலத்திரனியல் பயண அங்கீகாரம் உட்பட கையாளப்பட வேண்டிய விவகாரங்கள் தொடர்பாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் உயிரி அடையாளத்துவத்தை பயன்படுத்துதல், புதிய தொழில்நுட்பங்களை பிரயோகித்தல் போன்ற விடயங்களையும் அறிக்கை அடையாளம் கண்டுள்ளது. 

எல்லைக்கட்டுப்பாடு மற்றும் சர்வதேச சட்டங்களிற்கு அமைவாக செயற்படுதல் என்பவற்றிற்கான தேவை அதிகரித்துள்ள நிலையில்,  இந்த புதிய சட்டமூலத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அமைச்சரவை புதிய சட்டமூல நகல் வரைபிற்கு அங்கீகாரம் அளித்துள்ளது. அத்துடன் நகல் வரைபை சட்டமா அதிபரின் அவதானிப்புகளுடன் அமைச்சரவையின் பரிசீலனைக்காக சமர்ப்பிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.