ஜனாதிபதி மைத்திரி, ஒரு ஏமாளியா..?
அன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை போற்றிப் புகழ்ந்தவர்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு சாமரம் வீசுகின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,
நீங்கள் எதற்கும் அஞ்ச வேண்டாம் நீங்கள் 25 லட்சம் மேலதிக வாக்குகளினால் வெல்வீர்கள் என மஹிந்தவிடம் கூறிய நபர் ஒருவர் இன்று மைத்திரியிடம் சென்றுவிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஓர் பாரிய கட்சியாகும், அந்த கட்சியை நீர்த்துப்போகச் செய்ய இடமளிக்க முடியாது.கூட்டு எதிர்க்கட்சி என்ற ரீதியில் நாம் நாட்டின் மக்களின் நலன்களை முதன்மையாகக் கருதுகின்றோம்.
சுதந்திரக் கட்சி சிறந்த மூளையுடன், சிறந்த கொள்கைகளையும் கொண்ட கட்சியாகும்.எனினும் அதிகார மோகம் காரணமாக எடுக்கப்பட்ட சில தீர்மானங்களின் போது மூளைக்கு வேலை கொடுக்கப்படவில்லை.
அமைச்சர்கள் அரச அதிகாரிகளை மரத்தில் கட்டினார்கள், ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவில்லை.சில அமைச்சர்கள் ஊழல் பேர்வழிகள் என நேரடியாகவே குற்றம் சுமத்தப்பட்டது.
அந்தக் காலத்தில் அரசாங்கத்தின் சில விடயங்களை நானும் விமர்சனம் செய்திருந்தேன்.இன்று அரசாங்கத்தை விமர்சனம் செய்யும் சில தற்போதைய அமைச்சர்கள் அப்போது எதனையும் கூறவில்லை.
சில அரசியல்வாதிகள் தலைவர்களை பொய்யாக புகழ்கின்றார்கள், அவ்வாறான புகழ்ச்சிக்கு அடிமையானால் அரசியலில் எதிர்காலம் இருக்காது என விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

Post a Comment