முஸ்லிம்கள் இரகசியமாக, பள்ளிவாசல் கட்டுகிறார்கள் - பிக்குகள் முறைப்பாடு
-ARA.Fareel-
தெஹிவளை பாத்யா மாவத்தையிலுள்ள பள்ளிவாசலை முஸ்லிம்கள் இரகசியமாக கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதனை உடனே நிறுத்துங்கள்.
அங்கு மத்ரஸாவோ, பள்ளிவாசலோ இருக்கக்கூடாது என தெஹிவளை பகுதியைச் சேர்ந்த குருமாரும் பௌத்த மக்களும் நேற்று தெஹிவளை கல்கிஸை மாநகர சபை முதல்வர் ஏ.எம்.டீ.எச்.தனசிறி அமரதுங்கவைச் சந்தித்து முறைப்பாடு செய்தனர்.
தெஹிவளை – கல்கிஸை மாநகர சபை பாத்யா மாவத்தை பள்ளிவாசல் விஸ்தரிப்பு பணிகளை நிறுத்தாமைக்கு பலத்த கண்டனத்தையும் வெளியிட்டனர்.
நேற்று காலை தெஹிவளை – கல்கிஸை மாநகர சபை அலுவலகத்துக்கு பாத்யா மாவத்தை பகுதியைச் சேர்ந்த குருமார்கள் உட்பட சுமார் 50 பேர் வருகை தந்தனர். இவர்களில் பாத்யா மாவத்தை களுபோவில சாரானந்த தம்ம நிகேதனயைச் சேர்ந்த குருமார்களும் களுபோவில ஹத்போதிய ரஜமகா விகாரையைச் சேர்ந்த குருமார்களும் அடங்குகின்றனர்.
குழுவினரின் முறைப்பாடுகளை செவிமடுத்த தெஹிவளை கல்கிஸை மாநகர சபை முதல்வர் அங்கு இரகசியமாக கட்டட வேலை நடைபெறுகின்றதா? இல்லையா-? என்பது எனக்குத் தெரியாது. சமய பாடசாலை விஸ்தரிப்புக்காக அனுமதி மாநகர சபையினால் வழங்கப்பட்டுள்ளது. தற்போது கட்டிட வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்றார்.
சட்டரீதியாக அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும் அப்பகுதி மக்கள் எதிர்ப்பதால் கட்டடவேலைகள் தடை செய்யப்படவேண்டும் என்று குழுவினர் வலியுறுத்தினார்.
சட்டரீதியான அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் நீதிமன்ற உத்தரவொன்றின் மூலமே விஸ்தரிப்பு பணிகளை நிரந்தரமாக நிறுத்த முடியுமென மேயர் தெரிவித்தார்.
மாநகர சபை ஆணையாளர் சபையின் தொழில்நுட்ப அதிகாரியை பள்ளிவாசல் நிர்மாணங்கள் தொடர்பான அறிக்கையொன்றினை 24 மணித்தியாலங்களுக்கு சமர்ப்பிக்கும்படி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பில் தீர்வொன்றினைப் பெற்றுக் கொள்வதற்காக தெஹிவளை– கல்கிஸை மாநகர சபை அலுவலகத்தில் மாநகர சபை முதல்வரின் தலைமையில் கலந்துரையாடலொன்று எதிர்வரும் திங்கட் கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் மாநகர சபையின் அதிகாரிகள், நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், பள்ளிவாசல் பரிபாலன சபை பிரதிநிதிகள், பன்சலைகளின் குருமார்கள் கலந்துகொள்ளவுள்ளனர். விடிவெள்ளி

Post a Comment