ஒலி பெருக்கியை சப்தமாக பயன்படுத்துவது, பற்றிய மார்க்கத்தின் நிலைப்பாடு
-TM முபாரிஸ் ரஷாதி-
ரமழான் கால இரவு வணக்கங்களில் ஒலி பெருக்கியை ஊர் முழுக்க கேட்கும்படி சப்தமாகப் பயன்படுத்துவது மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஹராமான ஒரு விடயமாகும்.
சிறு பிள்ளைகளின் அழுகை சப்தத்தை கேட்ட நபிகளார் தொழுகையையே அவசரமாக நிறைவு செய்துள்ளார்கள். என்ற செய்தியின் மூலமாக நமது வணக்க வழிபாடுகள் கூட பிறருக்கு தொந்தரவாகவோ இடையூறாகவோ இருப்பதை மார்க்கம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை. என்பதை எம்மால் இலகுவாக புரிந்து கொள்ள முடிகிறது.
உங்களில் யார் பிறருக்கு தொழுகை நடாத்துவாரோ அவர் அத்தொழுகையை சுருக்கமாக முடித்துக் கொள்ளட்டும் ஏனெனில் அவர்களில் பலவீனர்கள் , முதியவர்கள் , தேவையுடையவர்கள் , இருக்கக்கூடும் என நபி ஸல் அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்
இந்த செய்தியில் கடமையான ஒரு தொழுகையையே பிறர் நலன் கருதி சுருக்கும் படி கட்டளையிடப் பட்டுள்ளது எனின் இன்று இஷா , தராவீஹ் போன்ற தொழுகைகளை ஊர் முழுக்க கேட்கும்படி ஒலிபெருக்கியில் சப்தமாகப் போட்டு சிறு பிள்ளைகளின் தூக்கத்தை நாசமாக்கி நோயாளிகள் , முதியவர்கள் , பிற மத சகோதரர்களின் உரிமைகளுக்கு பங்கம் விளைவிப்பது ஒரு போதும் மார்க்கம் அனுமதித்த ஒன்றாகி விடப் போவதில்லை
உள் பள்ளியில் இருப்பவர்களுக்கு கேட்கும்படி மாத்திரம் ஒலி பெருக்கியை பயன்படுத்துவதே நாம் செய்கின்ற அமல்களின் கூலி முழுமையாக எமக்கு கிடைக்க போதுமானதாகும்.
இப்படியிருக்க போலிப் பகட்டுக்காக தூர நோக்கின்றி சில பள்ளி நிர்வாகிகள் இந்த சலுகையை தவறாக பிரயோகிப்பது எதிர்கால அசௌகரியங்களுக்கு வழி சமைப்பதாகவே கருத முடிகின்றது.
இந்த விடயத்தில் மார்க்கம் சொல்லித்தருகின்ற பிறர் உரிமைகளைப் பேணிப் பாதுகாத்தல் என்ற வரையறைகளைப் பேணி செயல் படுவது நமக்கும் நாட்டுக்கும் நாயனுக்கும் நாம் செய்கின்ற மிகப் பெரிய நன்றியாகும்.

Inda arivippai sagala pallivayalgalum kadaipidittal engal samoogam munnerum !
ReplyDelete