Header Ads



"முஸ்லிம் தலைமைகள், அப்படி நினைக்ககூடாது" - கி.துரைராஜசிங்கம்

கடந்த காலத்தில் தமிழர் போராட்ட அரசியலில் முஸ்லிகளால் ஒத்துழைக்க முடியாத நிலை இருந்தது. அதற்கு பல காரணங்கள் இருந்தன. அதனை மட்டும் வைத்துக்கொண்டு போராளிகள் செயற்பட்ட விதத்திலேயே மிதவாத தமிழ் அரசியல் தலைவர்களும் நடந்து கொள்வார்கள் என முஸ்லிம் தலைமைகள் நினைக்ககூடாது என கிழக்கு மாகாண விவசாய, கால்நடை, மீன்பிடித்துறை அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்திற்கான புதிய கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை திணைக்களத்தின் வளாகத்தில் நடைபெற்றுள்ளது, இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தீர்வுத் திட்டம் ஒன்றை பெற்றுக்கொள்ள தமிழ் முஸ்லிம் தலைவர்கள் ஒன்றுபட்டு செயற்படவேண்டிய காலம் என தெரிவித்த அமைச்சர், சமகால அரசியலையும் கடந்த கால அரசியலையும் சீர்தூக்கிப்பார்த்து தமிழ் அரசியல் தலைவர்களுடன் ஒன்றிணைந்து ஒரு தீர்வுத் திட்டத்தினை தமிழ் பேசும் சமூகம் பெற்றுக்கொள்ள முஸ்லிம் தலைவர்கள் எங்களுடன் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

இந்த நாடு முழு நாடாக இயங்கியது கிடையாது. சுதந்திரத்திற்காகவும் இந்த நாட்டிற்காவும் போராடிய தமிழ் தலைவர்களின் கோரிக்கைகள் புறந்தள்ளியதன் காரணமாகவே தமிழர்கள் தங்களைக் காப்பற்றவேண்டும் என்ற சிந்தனைக்குள் வரவேண்டிய நிலை ஏற்பட்டது.

அந்த அரசியல் நிலைமைகளின் வரலாறு இந்த நாட்டின் வரலாற்றில் துன்பியல் வரலாறாகவே முடிந்துள்ளது. அந்த துன்ப வரலாறு 2009ஆம் ஆண்டு முள்ளிய வாய்க்காலில் நடைபெற்று முடிந்த பெரிய துன்பியல் நிகழ்வோடு முடிந்து, அடுத்த அத்தியாயம் திறக்கப்பட்டுள்ளது.

அந்த அத்தியாயமும் ஆரம்பத்தில் மிகவும் கொடூரமாக எழுதப்பட்டது. 2015 ஆம் ஆண்டு தை மாதம் 08ஆம் திகதிக்கு பின்னர் ஒரு சுமூகமான அரசியல் நிலைமையை நடைமுறைப் படுத்துகின்ற நிகழ்கால வரலாறு நடைபெற்றுக்கொண்டுள்ளது என இதன்போது கிழக்கு மாகாண விவசாய, கால்நடை, மீன்பிடித்துறை அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.