Header Ads



பாராளுமன்றத்தில் நேற்று நடந்த, சில சுவாரசியமான சம்பவங்கள்

-அழகன் கனகராஜ்-

சபையின் நேற்றையதின பிரதான நடவடிக்கைகள் தமிழ் மொழியில் முன்னெடுக்கப்பட்டன. இதனால் சபையில் பல தடுமாற்றங்கள் நிலவியதை அவதானிக்க முடிந்தது. ஆளும், எதிரணி உறுப்பினர் பலரும் தடுமாறிப் பேசினர்.

அவைக்குத் தலைமை தாங்கிய செல்வம் அடைக்கலநாதன், சபாநாயர் அறிவிப்பு முதல் அக்கிராசனத்திலிருந்து தான் எழுந்து செல்லும் வரையிலான சகல நடவடிக்கைகள், அறிவிப்புகள் மற்றும் கட்டளைகளையும் தமிழ் மொழியிலேயே வழங்கினார்.

இடையிடையே ஆங்கிலம், சிங்களம் கலந்த அறிவிப்புகளை விடுத்தார். இதன்போது உறுப்பினர்கள் சிலர் திகைத்து போயிருந்தனர். அவையில் நேற்று இருந்த பெரும்பாலான உறுப்பினர்கள், 'ஹெட்செட்' போட்டு இருந்தனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடையும் வரையில் 'ஹெட்செட்' போட்டிருந்தார்.

பிரதான நடவடிக்கைகள் நிறைவடைநததன் பின்னர், வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரம் ஆரம்பமானது. ஒழுங்குப்பத்திரத்தின் பிரகாரம், பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரிடமும் புத்திக பத்திரண எம்.பி, இலங்கையில் ஆறுகளைச் சார்ந்த அனுமதியற்ற மணல் அகழ்ந்தெடுத்தல், இரத்தினக்கல் மற்றும் தங்க அகழ்வு தொடர்பில் கேள்விகளை கேட்டிருந்தார்.

கேள்விகளை கேட்பதற்காக அவரை அழைத்த போது பிறிதொரு வரிசையில் இருந்த மற்றுமொரு உறுப்பினருடன் உரையாடிக்கொண்டிருந்த புத்திக பத்திரண எம்.பி, தனதுஆசனத்துக்கு ஓடோடி வந்து 'எனது மேசையில் „மனு இல்லை..., „மனு இல்லை...' என்றார். அதன்போது ஆளும் தரப்பினர் கெக்கென்று சிரித்து விட்டனர். உறுப்பினரே இது Questions and answers நேரம் என்று அடைக்கலநாதன் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரிடம், வாசுதேச நாணயக்கார எம்.பி கேட்டிருந்த கேள்வியை கேட்பதற்கு அவரை பெயர் கூப்பிட்டு அழைத்த போது, 'நான் கேட்கிறேன்' என்று தமிழில் கூறினார்.

இதனிடையே உதய கம்மன்பில

எம்.பி விவகாரம் சபையில் சூடுபிடித்திருந்த போது, குழுக்களின் பிரதித்தலைவர் ஏதோ உத்தரவை பிறப்பித்த போது, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினரான மஹிந்தானந்தே அளுத்கமகே, 'உங்களுக்கு என்ன பைத்தியமா, உங்களுக்கு என்ன பைத்தியமா' எனக்கேட்டார். எனினும் அவருடைய ஒலிவாங்கி முழுக்கி விடப்படவில்லை.

அவை நடவடிக்கைகளை கொண்டு நடத்துவதில் சற்று தடுமாறிப்போன குழுக்களின் பிரதித்தலைவர் 'ஓடர் பிளிஸ், சைலன்ஸ் பிளிஸ்' என்று வார்த்தைகளை அடிக்கொரு தடவை பயன்படுத்தினார் என்று குறிப்பிடத்தக்கது.

2

எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், நாடாளுமன்றத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (21) 'வெரிகுட்', 'வெரிகுட்' (மிக்க நன்று, மிக்க நன்று) என்று கூறியமையால், அவையிலிருந்து உறுப்பினர்கள் பெரும்பாலோனர் திகைத்து நின்றனர்.
நாடாளுமன்றம், குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (21) பிற்பகல் 1 மணிக்கு கூடியது.
சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் எழுந்த ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்தன, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஒன்றிணைந்த எதிரணியின் எம்.பியான உதய கம்மன்பில தொடர்பில் விசேட பிரச்சினையொன்றை கிளப்பினார்.
சட்டதரணியான உதய கம்மன்பில, இந்த அரசாங்கத்தின் அநாவசியமான முறைகேடான செயற்பாடுகளை விமர்சித்தவர். அத்துடன், ஜெனீவாவுக்குச் சென்ற குழுவுக்கு தலைமை தாங்கினார் என்று கூறினார்.
தினேஷ் குணவர்தன எம்.பியின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த இரா.சம்பந்தன், 'ஜெனீவா' என்ற வார்த்தையைக் கேட்டவுடன், 'ஜெனீவாவுக்குச் சென்றீர்களா? „வெரிகுட்..., „வெரிகுட்...' என்று, ஒலிவாங்கி முடுக்கி விடப்படாத நிலையில் உரத்த சத்தத்தில் கூறிவிட்டார்.
இதன்போது அவையில் இருந்த ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களில் பலர், திகைத்துப் போய்விட்டனர். தினேஷ் எம்.பியும் திகைத்துப் போய்விட்டார். எனினும், தன்னை சுதாகரித்துக்கொண்ட தினேஷ் எம்.பி 'எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே, ஜெனீவாவுக்கு நீங்கள் செல்லும் இடம் வேறு, நாங்கள் செல்லும் இடம் வேறாகும். ஆனால், விமானத்தில் சென்று ஒரே இடத்தில் தான் இறங்க வேண்டும்' என்றார்.
எனினும், குறுக்கிட்ட இரா.சம்பந்தன், 'உங்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஜெனீவாவுக்குச் சென்றவர் தானே' எனக் கூறியமர்ந்தார். இவ்விரு சந்தர்ப்பங்களிலும், இரா.சம்பந்தனின் ஒலிவாங்கி முடுக்கிவிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

1 comment:

  1. ஏராளமான உயிர்களையும் உடைமைகளையும் இழந்தும் ஆற்ற இயலாததை அவைத் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் தமது கடமையை தைரியமாகவும் சரியாகவும் செய்து காட்டியதன் ஊடாக ஏனையோருக்கு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.

    ReplyDelete

Powered by Blogger.