வைத்தியர்களை தூற்றுவது, இழிவான செயலாகும் - விஜயதாச
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவின் குடும்பத்தை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கடுமையாக சாடியுள்ளார்.
குறைந்த வசதிகளுடன் ஆசியாவின் மிகச் சிறந்த சேவைகளை வழங்கி வரும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் வைத்தியர்களை சில அரசியல்வாதிகள் தூற்றுவது மிகவும் இழிவான ஓர் செயலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு நேற்றைய தினம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,
வைத்தியர்களை இழிவுபடுத்தும் வகையிலான கருத்துக்கள் வெளியிடுவதனை வன்மையாகக் கண்டிக்கின்றேன். இந்த கருத்துக்கள் அரசாங்கத்தின் நிலைப்பாடாக ஒருநாளும் அமையாது.
வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு அரசாங்கம் என்ற ரீதியில் நாம் மரியாதை செலுத்துகின்றோம், அவர்களின் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது.
சில சில குறைபாடுகள் காணப்பட்டாலும் ஒட்டுமொத்த அடிப்படையில் வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது.
சில விடயங்கள் தொடர்பில் வைத்தியர்களுடன் முரண்பாடுகள் ஏற்படக்கூடும். எனினும் அவற்றை மதிநுட்பமான வகையில் தீர்த்துக் கொள்வதே அரசாங்கம் என்ற ரீதியில் செய்ய வேண்டிய காரியமாகும்.
எந்தவொரு நிலைப்பாட்டையும் கொண்டிருக்க மக்களுக்கு உரிமையுண்டு. சங்கம் என்ற ரீதியில் ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிப்பதனால் அவர்களை இழிவுபடுத்தி கண்டிக்கும் வகையில் கருத்து வெளியிடுவது நல்லாட்சி அரசாங்கத்திற்கு பொருத்தமாகாது.
வைத்தியர்கள் போன்ற கல்வி அறிவில் உயர்ந்தவர்களை இழிவுபடுத்துவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.இவ்வாறான செயற்பாடுகளினால் அரசாங்கமே நெருக்கடிகளை எதிர்நோக்கியது.
இந்த செயற்பாடுகள் எமக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்க புத்திஜீவிகள் என்ற வகையில் வைத்தியர்கள் முக்கிய பங்களிப்பினை வழங்கியுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுகாதார அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் வைத்தியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதனை மறந்து விட முடியாது என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவும் அவரது மகன் சதுர சேனாரட்னவும் வைத்தியர்களையும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரையும் கடுமையாக அண்மையில் சாடியிருந்தமையை கண்டிக்கும் வகையில் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.

Post a Comment