ஹோட்டல் கட்டணத்தை செலுத்தாத சிரந்தி, செங்கம்பளத்தை தவிர்த்த மைத்திரி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்சவின் ஹோட்டல் கட்டணத்தை செலுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2014ம் ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற வெசாக் விழாவினை பார்வையிடுவதற்காக சிராந்தி ராஜபக்ச சென்றிருந்தார் எனவும், அங்கு சில நாட்கள் பிரதான ஹோட்டலில் தங்கயிருந்தார் எனவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
முன்னளாள் ஜனாதிபதியின் மனைவி சிராந்தி ராஜபக்ச பிரான்ஸில் நடைபெற்ற வெசாக் நிகழ்வு ஒன்றை பார்வையிடுவதற்காக 2014ம் ஆண்டு சென்றிருந்தார்.
பிரான்ஸின் பாரிசில் ஒரு இரவிற்கு 25,73,746 ரூபா என்ற அடிப்படையில் அறை ஒதுக்கப்பட்டு தங்கியுள்ளார்.
இது தொடர்பான கொடுப்பனவுகளை மேற்கொள்ளுமாறு கோரி ஹோட்டல் பில் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சிராந்தியுடன் இந்த விஜயத்தில் இணைந்து கொண்ட ஏனையவர்களும் ஜனாதிபதிகள் பயன்படுத்தும் அளவிலான அறைகளை ஒதுக்கீடு செய்து கொண்டுள்ளனர்.
அறைகளை ஒழுங்கு படுத்துவதற்காக தலா 700 யூரோக்களும், மினி பார்களுக்காக தலா 371 யூரோக்களும் செலவிடப்பட்டுள்ளது.
மக்களின் பணத்தைக் கொண்டு இவ்வாறு செய்யும் விரயங்களுக்கான செலவுகளை அரசாங்கமே செலுத்த நேரிட்டுள்ளது.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இவ்வாறு பணம் விரயமாக்கப்பட்டுள்ள போதிலும் தற்போதைய ஜனாதிபதி ஜீ7 மாநாட்டின் போது கூட, பிரத்தியேக விமானத்தில் பயணம் செய்யவில்லை. வர்த்தக விமானமொன்றிலேயே பயணம் செய்திருந்தார்.
தனியான விமானமொன்றில் செல்லாத காரணத்தினால் ஜப்பானிய அரசாங்கம் வழங்கிய சிகப்பு கம்பள வரவேற்பு ஜனாதிபதிக்கு வழங்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
இது தொடர்பில் ஜப்பான் அரசாங்கம் வருத்தம் தெரிவித்திருந்தது, அது ஒரு பெரிய விடயமல்ல எனவும் அதனை தாம் எதிர்பார்க்கவில்லை எனவும் ஜனாதிபதி பதிலளிதிருந்தார்.
சாதாரண வர்த்தக விமானமொன்றில் சிங்கப்பூர் சென்று அங்கு நான்கு மணித்தியாலங்கள் காத்திருந்து அதன் பின்னர் ஜப்பானுக்கு ஜனாதிபதி சென்றிருந்தார் எனவும் இதனால் பாரியளவு பண விரயம் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிராந்தி ராஜபக்ச பிரான்ஸ் பயணம் மேற்கொண்டு நீண்ட காலத்தின் பின்னர் ஹோட்டல் பில் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குடும்ப ஆட்சிக்கும் நல்லாட்சிக்கும் உள்ள வித்தியாசம் பாரீர்!
ReplyDeleteஅப்படிப்பட்டவர்களைதான் இந்த அரசு பாதுகாக்குறது
ReplyDelete