இஸ்லாமிய மத அடிப்படைவாதம், நமது நாட்டின் வாயில் கதவுகளைத் தட்டுகிறது - டிரம்ப்
ஒபாமா அரசின் தவறான குடியமர்வுக் கொள்கையால், அமெரிக்காவில் மதப் பயங்கரவாதம் இறக்குமதி செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் வேட்பாளராகவிருக்கும் டொனால்டு டிரம்ப் கூறினார்.
ஆப்கானிஸ்தானில் பிறந்து, அமெரிக்காவில் குடியமர்த்தப்பட்ட ஆப்கன் குடும்பத்தைச் சேர்ந்த ஒமர் மதீன், ஆர்லண்டோ கேளிக்கை விடுதியில் சனிக்கிழமை நிகழ்த்திய பயங்கரவாதத் தாக்குதலில் துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சூழலில், அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படும் சர்ச்சைக்குரிய போட்டியாளர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது:
இஸ்லாமிய மத அடிப்படைவாதம் கடல் வழியாக நமது நாட்டின் வாயில் கதவுகளைத் தட்டுகிறது. அரசின் தவறான அகதிகள் கொள்கைகளாலும், உளவுத்துறை அதிகாரிகளின் கைகளை அதிபர் ஒபாமா கட்டிப் போடுவதாலும் பயங்கரவாதம் நம் நாட்டுக்குள் எளிதாக இறக்குமதியாகிறது.
அமெரிக்காவுக்குள் முஸ்லிம் அகதிகளை அனுமதிப்பதற்கு தாற்காலிகத் தடை விதிக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்துவேன் என்றார் அவர்.

Post a Comment