Header Ads



"இந்த அரசின் மீது முஸ்லிம்கள் வைத்திருக்கும், நம்பிக்கையை பாதுகாக்குமாறு கோரிக்கை"

முஸ்லிம்களின் உயிரினும் மேலான நபியையும், ஒரே இறைவனான அள்ளாஹ்வையும் பொது பல சேனாவின் செயலாளர் அவமானப்படுத்தியுள்ளதை உலமா கட்சி வன்மையாக கண்டிப்பதுடன் மஹிந்தவை தோற்கடிப்பதற்கு துணை போன பொது பல சேனா நல்லாட்சியின் மீதும் முஸ்லிம்களுக்கு வெறுப்பேற்ற முனையும் வெளிநாட்டு சக்திகளுக்கு துணை போவதாகவே தெரிகிறது என முஸ்லிம் உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்தார்.

அண்மைய ஞானசாரரின் கருத்து தொடர்பாக ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்

இந்த நாட்டில் எந்தவொரு கிளர்ச்சியையும் செய்யாமல் அமைதியாக இருந்த முஸ்லிம்கள் மீது 2012 முதல் பல அடாவடித்தனங்கள் சிங்கள பௌத்த இனவாதிகளால் அரங்கேற்றப்பட்டன. அவ்வேளை இத்தகைய செயல்களில் ஈடு படுவோருக்கெதிராக முன்னாள் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்காததன் காரணமாக உலமா கட்சி அரசாங்க ஆதரவிலிருந்து வெளியேறியது.

பின்னர் முன்னாள் ஜனாதிபதியுடன் இருந்த சில இனவாதிகள் ஜனாதிபதி தேர்தலின் போது அவரை விட்டும் விலகியதன் காரணமாகவும் தனக்கு இன்னொரு சந்தர்ப்பம் தந்தால் இனவாதத்தை ஒழித்துக்கட்டுவேன் என அவர் தெரிவித்ததாலும் உலமா கட்சி அவருக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளித்தது. ஆனாலும் முஸ்லிம் சமூகம் இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் மீது அதீத நம்பிக்கை வைத்து எதுவித நிபந்தனையுமின்றி அவருக்கு ஆதரவளித்து அவரது வெற்றியை உறுதி செய்தது. மக்களின் ஆணையை உலமா கட்சியும் ஏற்றுக்கொண்டது.

இந்த நல்லாட்சியில் ஓரளவு நாடு நிம்மதியாக இருந்து கொண்டிருக்கும் போது ஆங்காங்கே சில இனவாதிகள் முஸ்லிம்களுக்கெதிராக மோசமான ஊடக யுத்தத்தை கொண்டு செல்வது கவலை தருகிறது. இது விடயங்களை உண்ணிப்பாக கவனிக்கும் போது சில வெளிநாடுகள் தலையிட்டு இலங்கையின் அமைதியை குலைத்து அதில் குளிர் காண முணைகின்றதா என்ற கேள்வி எழுகிறது. எவ்வாறு மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க பொது பல சேனா பயன்படுத்தப்பட்டதோ அவ்வாறு நல்லாட்சியையும் குழப்பி நாட்டில் பதட்ட நிலையை ஏற்படுத்த முயலும் வெளிநாட்டு சக்திகளுக்கு பொதுபல சேனாவும் துணை போவதாகவே எமக்கு தெரிகிறது.

முன்னைய ஆட்சியில் பன்றியின் மீது இறைவனின் பெயரை எழுதியதற்காக முஸ்லிம்கள் கொதித்தார்கள். இப்போது ஒரு படி மேலே போய் இறுதித்தூதர் அவமதிக்கப்பட்டுள்ளார். ஆனாலும்; முஸ்லிம்கள் வழமை போல் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டுமென உலமா கட்சி கேட்டுக்கொள்வதுடன் பொதுபல சேனாவின் இனவாத பின் புலம் பற்றி நல்லாட்சி அரசாங்கம் விசாரணை செய்து இந்த அரசின் மீது முஸ்லிம்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை பாதுகாக்கும் படி அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறது என முபாறக் மௌலவி தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.