Header Ads



காலிக்கு வராதவர்கள் மீது நடவடிக்கை - SLFP + UPFA செயலாளர்கள் அறிவிப்பு

கட்சியின் தீர்மானத்திற்கு முரணாக காலியில் இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் பங்குபற்றாத அரசியல்வாதிகள் தொடர்பில் கட்சியின் மத்திய செயற்குழுவால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும், ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் இணைந்து வரலாற்றில் முதல் தடவையாக பாரிய மே தினக் கூட்டத்தை காலியில் நடத்தியிருந்த போதிலும் கட்சியின் சில உறுப்பினர்கள் அதில் பங்குகொள்ளவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் பெருந்திரளான மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வெற்றிகரமாக மேதின கூட்டத்தை நிறைவு செய்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எனினும், தனிநபர் சார்பில் மக்கள் செயற்படாது கட்சியுடன் அவர்கள் இணைந்திருப்பதை நேற்று அவதானிக்க முடிந்ததாகவும் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக காலியில் நடத்தப்பட்ட மே தினக் கூட்டத்தில் பங்குபற்றாத ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக கட்சியின் மத்திய செயற்குழு நடவடிக்கை எடுக்கும் எனவும் கட்சியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியிலிருந்து காலியில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் பங்குபற்றாதவர்கள் தொடர்பில் கட்சியின் மத்திய செயற்குழு மற்றும் ஒழுக்காற்று குழு என்பன நடவடிக்கை எடுக்கும் என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.