சர்வதிகாரியின் பதவியேற்பு விழாவில் மகிந்த
உகண்டாவில் சர்வாதிகார ஆட்சியை நடத்தி வரும் அந்த நாட்டு ஜனாதிபதி முசவேனியின் 6வது பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
முசவேனியை போன்றே இலங்கையில் சர்வாதிகாரமாக ஆட்சி நடத்த விரும்பிய மகிந்தவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில் வியப்பில்லை என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எவ்வாறாயினும் அந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் நோக்கில் மகிந்த ராஜபக்சவும் அங்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
முசவேனி 1986ம் ஆண்டு முதல் கடந்த 30 வருடங்களாக உகண்டாவை தனது பிடிக்குள் வைத்து கொண்டு ஆட்சி நடத்தி வருகிறார்.
ஆபிரிக்க கண்ட நாடுகளில் மதிக்கப்படாத முசவேனி போன்ற சர்வாதிகாரிகளே மகிந்த ராஜபக்ச போன்றவர்களுக்கு அழைப்பு விடுப்பார்கள் எனவும் அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.
அதேவேளை சட்டவிரோத ஆயுத கடத்தல் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படும் மகிந்த ராஜபக்சவின் உறவினரான ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவும் ஏற்கனவே உகண்டாவுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் போராளிகளுக்கு சட்டவிரோதமாக ஆயுதங்களை விற்பனை செய்ததாக உதயங்க வீரதுங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் ரஷ்யாவில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணிபுரிந்த நோயேல் ரணவீர என்பவரின் மரணம் தொடர்பிலும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக உதயங்க வீரதுங்க இலங்கை பாதுகாப்பு தரப்பினரால் தேடப்பட்டு வருகிறார். இதனால், அவர் இலங்கைக்கு வராது வெளிநாட்டில் இருந்து வருகிறார்.
மகிந்த ராஜபக்ச அண்மையில் தாய்லாந்து சென்றிருந்த போது உதயங்க வீரதுங்கவும் அங்கு சென்றிருந்தார். இந்த நிலையில் தற்போது உகண்டாவில் மகிந்த ராஜபக்சவை சந்திக்க அங்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
ராஜபக்சவினர் இலங்கையில் மோசடி செய்துள்ளதாக கூறப்படும் பணம் மறைத்து வைக்கப்பட்டுள்ள நாடுகளில் முசவேனியின் உகண்டாவும் ஒன்றென கூறப்படுகிறது.
1986 ஆம் ஆண்டு முதல் உகண்டாவை ஆட்சி செய்து வரும் முசவேனி, எதிர்க்கட்சிகளை தடை செய்து விட்டு, தனியாக தேர்தலை நடத்தி வெற்றி பெற்று ஆட்சியில் இருந்து வரும் சர்வாதிகார ஆட்சியாளராவார்.
2010 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச விரும்பிய தவணைகள் ஆட்சியில் இருக்கும் வகையில் சட்டத்தை திருத்திக்கொண்டதைப் போல், முசவேனியும் சட்டத்தை திருத்தி தொடர்ந்தும் ஆட்சியில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment