அனுரகுமாரவுக்கு எதிராக இட்டுக்கட்டிய செய்தி, ஊடகவியலாளர் இராஜினாமா
ஜே.வி.பி.யின் தலைவர் அனுர குமார திசாநாயக்கவுக்கு எதிராக இட்டுக்கட்டிய செய்தியொன்றை எழுதிய சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் தனது நிறுவனத்தின் பதவியில் இருந்து இராஜினாமாச் செய்துள்ளார்.
பிரபல சிங்கள செய்திப் பத்திரிகையான திவயின பத்திரிகையின் கடந்த வார ஞாயிறு இதழில் ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசாநாயக்க குறித்து இட்டுக்கட்டிய செய்தியொன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது.
அனுரகுமார திசாநாயக்க கட்சியின் நிதியைக் கையாடல் செய்துள்ளதாகவும், அரசாங்கத்துடன் இணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு மோசடிகளுக்கு எதிராக குரல் கொடுப்பதைத் தவிர்த்து கமிஷன் பெற்றுக் கொள்வதாகவும், பெண்கள் விடயத்தில் சபல புத்தியுடன் நடந்து கொள்வதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் இவ்வாறான விடயங்கள் காரணமாக அனுரகுமாரவின் தலைமைத்துவம் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் ஜே.வி.பி. கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படலலாம் என்றும் தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இச்செய்தியின் எதிரொலியாக ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய ஜே.வி.பி. கட்சி முக்கியஸ்தர்கள் குறித்த செய்தி போலியானது என்றும் ராஜபக்சவினரின் தேவைக்காக இட்டுக்கட்டி எழுதப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்கள்.
அத்துடன் ராஜபக்சவினரின் மோசடிகள் தொடர்பில் தகவல்களை அம்பலப்படுத்திய கோபத்தில் விமல் வீரவன்ச மற்றும் மஹிந்தவுக்கு நெருக்கமான தரப்பினரின் வழிகாட்டலில் குறித்த செய்தி எழுதப்பட்டிருப்பதாகவும் ஜே.வி.பி.யினர் தெரிவித்திருந்தார்கள்.
அத்துடன் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவிலும் இதுகுறித்த முறைப்பாடு ஒன்றையும் மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த செய்தியை எழுதியதாக ஜே.வி.பி.யினரால் குற்றம் சாட்டப்பட்ட சிங்கள ஊடகவியலாளர் மனோஜ் அபேதீர இன்று -11- தனது பதவியை இராஜினாமாச் செய்து ஊடக நிறுவனத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
செய்திக்கான பொறுப்பை தான் ஏற்றுக் கொள்வதாகவும், தான் பணியாற்றிய ஊடக நிறுவனம் செய்திக்கு எந்த வகையிலும் தொடர்பு பட்டிருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் மனோஜ் அபேதீர, ராஜபக்சவினரின் காலத்தில் டெலிகொம் நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக்கு நியமிக்கப்பட்டு பெரும் தொகையொன்றை ஊதியமாகப் பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment